Published : 17 Sep 2019 04:48 PM
Last Updated : 17 Sep 2019 04:48 PM

சாரதா சிட்பண்ட் மோசடி: முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையரைப் கண்டுபிடிக்க தனிப்படை- சிபிஐ ஏற்பாடு

புதுடெல்லி

சாராதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரைக் கண்டுபிடிக்க தனிப்படையை சிபிஐ அமைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் இரட்டிப்பு வட்டியும் தருவதாகக் கூறி ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.சாராதா சிட்பண்ட் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், பல ஆவணங்களைத் தரவில்லை, முறையாக ஒப்படைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியது.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றபோது, சிபிஐ அதிகாரிகளுக்கும், கொல்கத்தா போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை கைது செய்யவிதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விலக்கிக்கொண்டது.

இதையடுத்து, சாரதா சிட்பண்ட் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி சிபிஐ தரப்பில் இருமுறை போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை.

சிபிஐ அதிகாரிகள் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரிடம் நேற்று வழக்கின் முக்கியத்துவம் கூறி கடிதம் அளித்து இன்று நேரில் ஆஜராகக் கூறி இருந்தனர். ஆனால் ராஜீவ் குமார் இன்றும் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை
இதையடுத்து, ராஜீவ் குமாரை கைது செய்வது சட்டரீதியான வழிகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின. மேலும், சிபிஐ நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காமல் தலைமறைவாக இருக்கும் ராஜீவ் குமாரை கண்டுபிடிக்க தனிப்படையை சிபிஐ அமைத்துள்ளதாகத் தெரிகிறது

இதுகுறித்து சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், " சிபிஐ விசாரணைக்கு இதுவரை போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் இதுவரை, இப்போதுவரை ஒத்துழைக்கவில்லை. அவரை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சாரதா சிப்பண்ட் மோசடி வழக்கில் முன் ஜாமீ்ன் கோரி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x