

புதுடெல்லி
பாஜகவின் அகண்ட பாரத கனவு ஆகஸ்ட் 5-ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளில் நிறைவேறியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள் முதல் அங்கு ஒரே ஒரு புல்லட் கூட வெடிக்கவில்லை. ஒருவர் கூட இறக்கவில்லை.
அதற்கு முன்னதாக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தால் என்னவாகுமோ என்று நிறைய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் ஆகஸ்ட் 5-ல் தீர்ந்துவிட்டன.
நிறைய பேர் 370 நீக்கத்தை விரும்பினர். விளைவுகளை எண்ணி அதை நிறைவேற்றத் தயங்கினர். இன்று பாஜகவின் அகண்ட பாரத கனவு நனவாகியுள்ளது.
இதுபோலவே இந்தியப் பொருளாதாரம் நிச்சயமாக 5 ட்ரில்லியன் அளவை எட்டும். சர்வதேச பொருளாதார தேக்கநிலையால் இது எப்படி சாத்தியமாகும் என மக்கள் மனங்களில் ஐயம் ஏற்படலாம். ஆனால் இந்தியா நிச்சயம் இந்த இலக்கை எட்டும்.
மோடி அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எப்படி எடுத்து செயல்படுத்துவது என்பதற்கு சரியான உதாரணம். ராணுவத்தினரால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் தொடங்கி பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளோம்.
துல்லிய தாக்குதல், வான்வழித் தாக்குதல் என எதுவாக இருந்தாலும் சரியான முடிவை நாங்கள் எடுக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதில்லை. இந்தியாவின் ஒரு சிறு பகுதியைக் கூட யாருக்கும் விட்டுத்தருவதாக இல்லை.
2024-க்கு முன்னதாகவே இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக வளரப்போகிறது. இது நிச்சயம் நடைபெறும். இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக உருவாகும்.
ஜிடிபி 5% ஆக குறைந்ததாக குறை கூறுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் மின் வசதி, எல்லோருக்கும் சாலை, வீட்டு வசதி எல்லாம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் வராதது ஏன்? ஒரு தனி நபரின் மரியாதையுடன் வாழும் உரிமையும் ஜிடிபியில் கணக்கிடப்படவேண்டும்.
மக்கள் இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பாத்து இந்த ஆட்சியை சீர்தூக்க வேண்டும். முந்தைய ஐமுகூ ஆட்சியில் கொள்கை முடக்கமே இருந்தது. ஆனால் இப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவுகளை எடுப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறது" என்றார்.
-ஏஎன்ஐ