Published : 17 Sep 2019 04:23 PM
Last Updated : 17 Sep 2019 04:23 PM

பிரதமர் மோடியைச் சந்திப்பது அரசியலமைப்புக் கடமை: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா

பிரதமர் மோடியைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான், அரசியலமைப்புக் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்

பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தபின், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி முதல் முறையாகச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியைச் சந்திக்க நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்காக இன்று மாலை டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வந்தார். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெல்லி என்பது தேசத்தின் தலைநகரம் அரசு தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் அங்குதான் சென்று இருக்கிறேன். மாநிலம் தொடர்பான விவகாரங்களுக்கு டெல்லிக்துதான் ஒவ்வொருநேரமும் சென்றிருக்கிறேன். இது வழக்கமான பயணம்தானே. டெல்லிக்குச் சென்று நீண்டநாளாகிவிட்டது. என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதியையும், வரவேண்டிய நிதியையும் கேட்டுப்பெற நான் போகிறேன்.

பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன். இந்த நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எங்கும் செல்ல முடியாது. அவர்களுக்காக நான் பேசப் போகிறேன்.

அதுமட்டுமல்லாமல் நீண்டகாலமாக மேற்கு வங்கம் என்ற பெயரை வங்காளம் என்று மாற்றும் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் தராமல் இருக்கிறது. கடந்தஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி மாநில சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினோம்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். என்னுடைய வழக்கமான பணி சந்திப்புதான். பிரதமரை மாநில முதல்வர் சந்தித்துப் பேசுவது என்பது அரசியலமைப்புக் கடமை. நாட்டின் நலனுக்காக இருவரும் சந்தித்து பேசி, பணியாற்ற இருக்கிறோம்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்

ஆனால், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன் ஆஜராகாமல் தப்பித்து வருகிறார். அவரை கைது செய்வதற்கான சட்ட வழிகளையும் சிபிஐ ஆராயத் தொடங்கி இருக்கிறது. ராஜீவ் குமாரும் முன்ஜாமீன் கோரி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நேரத்தில் பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்துகிறது, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x