

அகமதாபாத்
பிரதமர் மோடி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தனது தாய் ஹீரா பென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமர் மோடி இன்று 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு, சினிமா துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் கேவாதியா பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலாப் பகுதியை பார்வையிட்டார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பின்னர், நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால் அதையொட்டி நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் வசிக்கும் தனது தாய் ஹீரா பென் மோடியை பார்க்க பிரதமர் மோடி சென்றார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று இன்று அவரிடம் ஆசி பெற்றார். மேலும் தாயுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.