

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. தனது பிறந்த நாளை குஜராத்தில்தான் முழுமையாக பிரதமர் மோடி கொண்டாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தில் காலை கேவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் பையில் அடைக்கப்பட்ட வண்ண பட்டாம் பூச்சிகளை சுதந்திரமாக பறக்கவிட்டு தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை தொடர்ந்தார்.
பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால் அதையொட்டி நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா, திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ நரேந்திர மோடிஜி-க்கு எனது 69வது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போது உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடனும் இருக்க ஆசிர்வதிக்கப்படுவீர்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.