

காந்திநகர்
சர்தார் படேலின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டு தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவை எடுத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கேவாடியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போ அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழலை உள்ளடக்கியதாகவே வளர்ச்சி இருக்க வேண்டும். இதுவே நமது கலாச்சாரம். இயற்கை நமக்கு நெருக்கமானது. அது அணிகலன் போன்றது. வளர்ச்சியை காணும் நேரத்தில் தற்சார்பும் மிகவும் அவசியம்.
குஜராத் மாநிலம் வளர்ச்சியில் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து இந்த சாதனையை செய்து வருகிறது. சர்தார் சரோவர் அணைப்பகுதியில் உலகிலேயே மிக உயரமான சர்தார் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
133 ஆண்டுகள் பழமையான சுதந்திர தேவி சிலையை காண நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். ஆனால் 11 மாதங்களே ஆன சர்தார் படேல் சிலையை காண நாளொன்றுக்கு 8.500 பேர் வருகை தருகின்றனர். இதற்கு சர்தார் படேல் மீதான ஈர்ப்பே காரணம். ஒவ்வொரு பிரச்சினைகளை தீர்ப்பதுடன், புதிய இலக்கை நோக்கி பயணிப்பதே புதிய இந்தியா.
ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சினைக்கு தீ்ர்வு காண வேண்டும் என்பது சர்தார் வல்லபாய் படேலின் கனவு. அவரது தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டே காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சினைக்கு தீ்ர்வு கண்டோம்.
அதுபோலவே இன்று ஹைதரபாத் இந்தியாவுடன் இணைந்த தினம். ஹைதரபாத் தனி நாடாக இருக்கும் என அப்போதைய கடைசி மன்னர் 1947-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் படேலின் நடவடிக்கையால், திட்டமிடலால் அந்த பகுதி இந்தியாவுடன் இணைந்தது. 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இந்தியாவுடன் ஹைதரபாத் முறைப்படி இணைந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.