இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறான கருத்து: கட்கரி பேச்சு

இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறான கருத்து: கட்கரி பேச்சு
Updated on
1 min read

நாக்பூர்

இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவின் மாலி சமூகத்தினர் தங்களுக்கு சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு செய்து தேர்தலில் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது கட்கரி இக்கருத்தைத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "இடஒதுக்கீடு என்பது தலித்துகளுக்கும் சமூக, பொருளதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

எப்போதெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் கட்சித் தொண்டர்கள் சாதிய ரீதியில் இட ஒதுக்கீட்டை முன்வைத்து வாய்ப்பு கோருகின்றனர். தேர்தல் வாய்ப்பை கட்சிப் பணியினாலேயே பெற வேண்டுமே தவிர சாதியைக் காட்டி பெறக்கூடாது.
இதுவரை அரசியலில் சாதித்தவர்கள் யாரும் சாதியை முன்னிறுத்தி சாதிக்கவில்லை.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அரசியலில் அதிகமாக அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருப்பதால் மட்டுமே அந்த சாதி சமூகம் முன்னேற்றத்தைப் பெற்றுவிடுவதில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கிறிஸ்தவர். அவர் எந்த சாதியையும் சாராதவர். ஆனால் பெரிய இடத்தை அடையவில்லையா? இந்திரா காந்தி சாதியை வைத்து ஆட்சிக்கு வரவில்லையே. இப்போதுகூட ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் எல்லா சாதி மக்களின் ஆதரவோடுதான் ஆட்சியமைத்திருக்கிறார்.

ஒருகாலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கப்பட்டது. நானும் ஆமாம் என்று ஆமோதித்தேன். ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா ஸ்வராஜ் எல்லாம் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறினர் என்ற கேள்வியைக் கேட்காமல் எப்போது இருந்ததில்லை.

இடஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் எனக் கூறுவது தவறு" எனக் கூறியுள்ளார்.

-ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in