Published : 17 Sep 2019 12:51 PM
Last Updated : 17 Sep 2019 12:51 PM

சாரதா சிட்பண்ட் மோசடி: முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையரை கைது செய்ய சிபிஐ தீவிரம்: முன்ஜாமீன் கோரினார்

புதுடெல்லி

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் இன்றும் சிபிஐ முன் ஆஜராகவில்லை. இதனால், அவரை கைது செய்வதற்கான வழிகளை சிபிஐ ஆய்வு செய்து வருகிறது

மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் இரட்டிப்பு வட்டியும் தருவதாகக் கூறி ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் தலைமையில் செயல்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை முறையாகக் கொண்டு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிறப்பு விசாரணை குழு கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.
சாராதா சிட்பண்ட் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், பல ஆவணங்களைத் தரவி்ல்லை, முறையாக ஒப்படைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியது.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றபோது, சிபிஐ அதிகாரிகளுக்கும், கொல்கத்தா போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டார். சிபிஐ போக்கைக் கண்டித்து 14 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் மம்தா ஈடுபட்டார்

இதையடுத்து, ராஜீவ் குமாரைக் கைதுசெய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறக்கோரி ராஜீவ்குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜீவ் குமாரை கைது செய்ய தடைவிதித்து பலமுறை சிபிஐக்கு தடைவிதித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடையை விலக்கிக்கொண்டது.

இதைத்தொடர்ந்து சாரதா சிட்பண்ட் வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி, ராஜீவ் குமாருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், விடுப்பில் இருப்பதால் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் இருவர், தலைமைச் செயலகத்துக்கு நேற்று சென்று தலைமைச் செயலாளர் மலே டி, உள்துறை செயலாளர் அலப்பன் பந்த்யோபத்யாயே ஆகியோரைச் சந்தித்து போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் குறித்து கடிதம் அளித்தனர். அவரை விசாரணைக்கு ஆஜராகக்கோரியும், விடுப்பு முடிந்து எப்போது பணியில் இணைவார் என்றும் சிபிஐ அதிகாரிகள் கேட்டு, இன்று காலை 10 மணிக்கு ஆஜராகக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளனர்.

ஆனால், இன்று காலை சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகுவார் ராஜீவ் குமார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்றும் ஆஜராகவில்லை. இதனால், சட்டத்துக்கு உட்பட்டு ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான வழிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான சட்டவழிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேற்கு வங்க போலீஸ் டிஜிபி நேற்று சிபிஐ அதிகாரிகளிடம் கூறுகையில் ராஜீவ் குமாரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், வரும் 25-ம் தேதிவரை ராஜீவ் குமார் விடுமுறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டரீதியாக வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் வழிகளையும் ராஜீவ் குமார் ஆலோசித்து வருகிறார்.இதற்கிடையே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளது பல்வேறு ஊகங்களை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x