

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப் பேரவைகளுக்கு ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடனும், ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியுடனும் முடிவடையவுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமைச் செயலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் வெளியிடும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடையவுள்ளது. அந்த மாநிலத்துக்கு தனியாகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.