Published : 17 Sep 2019 10:57 AM
Last Updated : 17 Sep 2019 10:57 AM

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அமராவதி

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத். சிவபிரசாத் நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சிவபிரசாத் சபாநாயகராக இருந்தபோது ஆந்திர சட்டப்பேரவையில் இருந்த ஏராளமான ஃபர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதில் சட்டப்பேரவை பொருட்கள் அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் ஃபர்னிச்சர் ஷோரூமுக்கு அனுப்பி வைத்து, அவற்றை உபயோகப்படுத்தி வருவாக புகார் எழுந்தது.

இதனையடுத்து கோடலா சிவபிரசாத் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிவபிரசாத் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவபிரசாத் மரணத்துக்கு அவருக்கு அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்தநிலையில் சிவபிரசாத் மரணம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரான கோடலா சிவபிரசாத் ராவ் மறைவு எங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனாலும் அதற்கான காரணம், பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

ஆந்திர அரசு முழுக்க முழுக்க அரசியல் காழ்புணர்ச்சியுடன் தெலுங்குதேச கட்சியை அணுகுகிறது. எனவே சிவபிரசாத் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கை மாநில அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x