

என்.மகேஷ்குமார்
காகிநாடா
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள பாப்பி கொண்டலு எனும் மலைப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. கோதாவரி ஆற்றில் படகு சவாரி செய்து இப்பகுதிக்கு செல்ல வேண்டும்.
சுற்றுலாத்தலமாக புகழ்பெற்ற இந்த இடத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருவது வழக்கம். நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் படகு சவாரி செய்தனர். ராயல் வசிஷ்டா எனும் படகில் மொத்தம் 73 பேர் பாப்பி கொண்டலு பகுதிக்கு புறப்பட்டனர். ஆற்றில் சிறிது தூரம் சென்றதும் படகு சுழலில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காணாமல் போன 32 பேரை தேடும் பணி இரவு பகலாக நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று பிற்பகல் படகு இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். கோதாவரி ஆற்றில் 315 அடி ஆழத்தில் படகு புதைந்திருந்தது. மேலும், இதில் சில சடலங்களும் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவைகளை மீட்கும் பணிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் ஜெகன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோன்று இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.