

புதுடெல்லி,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இந்திய-அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவ்டி மோடி’ பேரணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்கிறார் என்ற வெள்ளை மாளிகை அறிவிப்பினையடுத்து பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
“ஹூஸ்டன் பேரணியில் அதிபர் (டொனால்ட் ட்ரம்ப்) கலந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்த ஒரு செய்கை உறவின் வலுவையும் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அங்குள்ள இந்தியர்களின் பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும் ” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில் ஹூஸ்டன் என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்தில் சுமார் 50,000 இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்குள்ள ‘காஷ்மீரின் நண்பர்கள்’ என்ற குழு குழு மோடிக்கு எதிராக ‘அமைதிப் பேரணி’ நடத்துவதாக இருந்ததும் ட்ரம்ப் பங்கேற்பினால் தற்போது நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
அதாவது அந்தப் பேரணி இந்த நிகழ்வின் அருகில் கூட வர முடியாதபடி செய்யப்படும் என்பதை அமெரிக்க ரகசிய புலனாய்வு சேவை உறுதி செய்யும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேரணி கூட்டம் குறித்து இந்திய அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பின் நிறுவனர் ஜக்திப் அலுவாலியா கூறும்போது, “ஒரு இந்தியனாக பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டன் தயாரானது பெருமை அளிக்கிறது. உலகின் எரிசக்தி தலைநகரம் ஹூஸ்டன். அமெரிக்காவின் பன்முக நகரமாகும் இது. அதிபரும் பிரதமரும் கலந்து கொள்வது வளரும் இந்திய-அமெரிக்க உறவுகளின் ஒரு அறிகுரி” என்று தெரிவித்தார்.