

புதுடெல்லி
அயோத்தி நில உரிமை தொடர்பாக மீண்டும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை தொடங்க அனுமதி கோரி மத்தியஸ்த குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வுகாண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார்.
இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.
அப்போது அயோத்தி நில விவகாரத்தில் சமரச முயற்சி கைகூடவில்லை என மத்தியஸ்த குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் விசாரித்து வேகமாக முடிக்கப்படும் எனத் தெரிவித்தது.
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் மீண்டும் மத்தியஸ்த நடவடிக்கையை தொடங்க வேண்டும் என இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந்தநிலையில் மத்தியஸ்த குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அயோத்தி பிரச்சினையில் தீர்வு காண மீண்டும் மத்தியஸ்த முயற்சியை தொடங்க விரும்புவதாகவும், பல்வேறு மத அமைப்புகளும் மீண்டும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மத்தியஸ்த குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும், அதேசமயம் வழக்கு விசாரணையை நிறுத்த தேவையில்லை எனவும் மத்தியஸ்த குழு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்