மற்றொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததாக உ.பி. தலித் இளைஞர் உயிரோடு எரித்துக்கொலை; அதிர்ச்சியில் தாய் மரணம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஹார்டோய்,

மற்றொரு வகுப்பைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 20 வயது தலித் இளைஞர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹார்டோய் மாவட்டத்தின் படேசா பகுதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த ஆணவக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக இளைஞரின் தாயாரின் மரணத்திற்கும் வழிவகுத்ததாக அவர்கள் கூறினர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி கூறியதாவது:

மோனு அதே கிராமத்தில் வேறொரு வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். இவர்களின் பழக்கம் குறித்து அந்த ஊர் மக்களிடையே அரசல்புரசலாக தெரியவந்தது. இதனால் கோபமடைந்த பெண்ணைச் சேர்ந்தவர்கள் மோனுவை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அந்தப் பெண்ணை வழக்கமான ஓர் இடத்தில் சந்தித்துவிட்டு நேரடியாக வீட்டுக்கு வராமல் தனது உடல்நலம் குன்றிய தனது தாயார் ராம் பேட்டி (60) சிகிச்சைக்காக ரூ.25,000 ஏற்பாடு செய்த பின்னர் திரும்பி வந்ததாக அவரது மாமா ராஜு தெரிவித்தார்.

அப்போதுதான் வஞ்சம் தீர்க்கக் காத்துக்கொண்டிருந்த கும்பல் மோனுவை வீட்டுக்குள் செல்லாமல் தடுத்து அவர்கள் வேறொரு வீட்டிற்கு இழுத்துச் சென்றனர். அங்கு அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு அவரை பிணைக் கைதி போல கட்டிவைத்து அடித்துள்ளனர். பின்னர் அந்த மோனுவை தீவைத்து எரித்தனர். மோனு தீயில் எரிந்தபோது அவரது அழுகை சத்தத்தைக் கேட்ட உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மோனுவை தீக்காயங்களிலிருந்து காப்பாற்ற உள்ளூரிலேயே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்களால், அவர் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை லக்னோ செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

மோனு எரிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த இளைஞரின் அம்மா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் பின்னர் தெரிவித்தனர்.

பெண்ணின் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் அவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in