இந்தி இணைப்பு மொழி தான்; உயர்ந்த மொழி என அர்த்தமல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தி இணைப்பு மொழி தான்; உயர்ந்த மொழி என அர்த்தமல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி

இந்தி இணைப்பு மொழி என்பதாலேயே நாட்டில் உள்ள மற்ற மொழிகளை விட உயர்ந்த மொழி என அர்த்தமல்ல என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

இந்தி மொழி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்தார்.

அதில் அவர் கூறுகையில், "இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது.

ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருப்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் காணப்படுகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரும் அமித் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா இதுகுறித்து கூறியதாவது:
அனைத்து மாநில மொழிகளையும் பெருமைபடுத்தி பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்திலேயே கூட மாநில மொழிகளின் சிறப்பை அவர் எடுத்துக் கூறியுள்ளார். நாம் அனைவரும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தி என்பது இணைப்பு மொழியாக இருக்கும் என்பதாலேயே அந்த மொழி மற்ற மாநில மொழிகளை எல்லாம் விட உயர்ந்த மொழி என ஆகி விடாது. எனவே இந்தி தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in