

புதுடெல்லி,
தனக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்தமைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத்.
முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, " குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்த்காக் ஆகிய பகுதிகளில் சென்று உறவினர்களையும் மக்களைச் சந்திக்கலாம். ஆனால் பொதுக்கூட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது" எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் காஷ்மீர் செல்ல அனுமதித்தமைக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. எனது மனு மற்ற மனுக்களைவிட வித்தியாசமானது. அதில் அரசியல் கலப்பு இல்லை. நான் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி கோரியிருந்தேன். காஷ்மீரின் சாதாரண மக்கள் குறித்தே நான் அக்கறை தெரிவித்திருந்தேன்.
இதற்கு முன்னதாக இருமுறை ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றுவிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டேன்.
எனது மனுவில் நான் குடும்பத்தாரை பார்க்கப்போவதாகக் குறிப்பிட்டு அனுமதி கேட்கவில்லை. எனது அக்கறை குடும்பத்தின் மீது இருந்தாலும் அங்குள்ள லட்சோப லட்ச மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள். எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன்" என்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் காஷ்மீர் தொடர்பாக பேசியது குறித்த கேள்விக்கு, "இது மிகவும் நல்ல விஷயம். இதில் எனக்கு மகிழ்ச்சியே. என்னைப் பொருத்தவரை எல்லோருமே காஷ்மீரில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதியே காஷ்மீர் சென்று நிலைமையை நேரில் பார்க்க விரும்புவதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.
முன்னதாக காஷ்மீர் தொடர்பான மற்றொரு மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய், "மக்கள் நீதிமன்றத்தை அணுக முடியாவிட்டால் அது தீவிரமான விஷயம். ஸ்ரீநகருக்கு தேவைப்பட்டால் நானே நேரில் செல்வேன்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏஎன்ஐ