

புதுடெல்லி
இந்தியாவுக்கு எந்தவிதமான கச்சா எண்ணெய் பற்றாக்குறையும் வராமல் பார்த்துக்கொள்வோம் என்று சவுதி அரேபிய அரசு உறுதியளித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே கச்சா எண்ணெய் நுகர்வில் 3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதேபோல, உலகிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதில் 2-வது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது கவனிக்கத்தக்கது
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலால் பலத்த சேதமடைந்து அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்னும் பலவாரங்களுக்கு உற்பத்தி நடைபெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சவுதியில் உள்ள ஆரம்கோ ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
சவுதி அரேபிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது
இந்தியாவின் 83 சதவீத கச்சா எண்ணெய் தேவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மூலம பெறப்படுகிறது. சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலால் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும் பெட்ரோலிய கச்சா எண்ணெயில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது.
ஆனால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதில் எந்தவிதமான இடர்பாடும், பற்றாக்குறையும் வராது என்று சவுதி அரேபியா உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், " சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவன அதிகாரிகள் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் பேசினார்கள். சவுதி அரேபியா எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குதலால் இந்தியாவுக்கு சப்ளை செய்யும் கச்சா எண்ணெய் எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படாது என்றுஆ உறுதியளித்துள்ளது.
அரோம்கோ நிறுவனத்தையும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களையும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை தீவிரமாக கவனித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவில் நடந்த தாக்குதல் குறித்து கோடக் ஈக்யூட்டிஸ் நிறுவனம் கூறுகையில் " கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் உலகின் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால், வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்.
இந்த விலை உயர்வு என்பது சவுதி அரேபியா மீண்டும் முழுமையான உற்பத்தியை தொடும்வரை இருக்கும்.முழு உற்பத்தியை எட்டுவதற்கு ஏறக்குறைய சில வாரங்கள்கூட ஆகலாம். அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் எந்தவிதமான பதற்றமான சூழலும் ஏற்படாமலும் இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் நிலைமை என்னாகும் என்று இப்போது கூற இயலாது. இப்போது போதுமான அளவு இருப்பு வைத்துள்ளதால் சவுதி நிறுவனங்கள் நாடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றன. ஈரான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தடை செய்துவிட்டதால் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது
பிடிஐ