Published : 16 Sep 2019 02:48 PM
Last Updated : 16 Sep 2019 02:48 PM

இந்துக்களுக்கு துன்பம் விளைவித்தால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: அமைச்சர் கிரிராஜ் சிங்

புதுடெல்லி

பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு துன்பம் விளைவித்தால் அந்நாட்டுக்கு இந்திய குடிமக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சிறுபான்மையினர் பள்ளியின் முதல்வர் ஒருவர் மதமாற்றம் செய்வதாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், "பாகிஸ்தானுக்கு பலமிருந்தால் இந்தியாவுடன் நேரடியாக மோத வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற புனிதமற்ற செயல்களில் ஈடுபட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இந்திய குடிமக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இனி வரும் நாட்களில் அதை அவர்கள் பார்க்கப்போகிறார்கள்" என்று கூறினார்.

முன்னதாக, பாகிஸ்தானின் கோட்கி நகரில் சனிக்கிழமையன்று சிந்த் பப்ளிக் பள்ளி முதல்வர் நோட்டல் மாலுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. முதல்வர் நோட்டல் மால் பள்ளியில் மதமாற்றத்துக்கு முயன்றதாக வெளியான செய்தியை அடுத்து அவரை கைது செய்யக்கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆங்காங்கே கடையடைப்புப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நோட்டல் மால் மீது மதமாற்றம் செய்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் வாழும் சீக்கிய, இந்து மற்று கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக அடிக்கடி அத்துமீறல்கள் நடைபெறுகிறது. இது தொடர்பான செய்திகளும் வெளியாகி வருகின்றன. அண்மையில்கூட சீக்கிய பெண் ஒருவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆட்சிக்கு வந்த நாள் முதலே சிறுபான்மையினர் நலன் பற்றி பேசும் இம்ரான் கான் அவர்களுக்காகவே பெரிதாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதற்கு சர்வதேச சமூகம் அடிக்கடி இதுதொடர்பாக வெளியிடும் கண்டன அறிக்கைகளே சாட்சி.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x