Published : 16 Sep 2019 02:19 PM
Last Updated : 16 Sep 2019 02:19 PM

சாரதா சிட்பண்ட் வழக்கு: முன்னாள் கொல்கத்தா போலீ்ஸ் ஆணையருக்கு பிடி இறுகுகிறது: மேற்குவங்க தலைமைச் செயலகம் சென்ற சிபிஐ

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் வழக்கில் தொடர்புடைய முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாததால், இன்று தலைமைச் செயலகத்துக்குச் சென்று சிபிஐ அதிகாரிகள் கடிதம் அளித்தனர்.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் இரட்டிப்பு வட்டியும் தருவதாகக் கூறி ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் தலைமையில் செயல்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை முறையாகக் கொண்டு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிறப்பு விசாரணை குழு கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.

சாராதா சிட்பண்ட் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், பல ஆவணங்களைத் தரவி்ல்லை, முறையாக ஒப்படைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியது.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றபோது, சிபிஐ அதிகாரிகளுக்கும், கொல்கத்தா போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டார். சிபிஐ போக்கைக் கண்டித்து 14 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் மம்தா ஈடுபட்டார்

இதையடுத்து, தன்னைக் கைதுசெய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 24-ம் தேதி வரை ராஜீவ் குமாரைக் கைதுசெய்ய சிபிஐக்கு தடை விதித்தது.
அதன்பின் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி ராஜீவ் குமாரை சிபிஐ கைதில் இருந்து தடை உத்தரவை கடந்த மே 30-ம் தேதி பெற்றார். இந்தத் தடை உத்தரவை பலமறை நீதிமன்றம் நீட்டித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தடையை நீட்டிக்க மறுத்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களி்ல கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அளித்தனர். ஆனால் விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகவில்லை, அவரைத் தொடர்பு கொண்டபோது அவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்தசூழலில் மேற்கு வங்க சிபிஐ அதிகாரிகள் இருவர், தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை 10.40 மணிக்குச் சென்றனர்.
தலைமைச் செயலாளர் மலே டி, உள்துறை செயலாளர் அலப்பன் பந்த்யோபத்யாயே ஆகியோரைச் சந்தித்து போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் குறித்து கடிதம் அளித்தனர்

அந்த கடிதம் குறித்து சிபிஐ வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், " முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரை சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணைக்காக நோட்டீஸ் அளித்தும் அவர் ஆஜராகவில்லை. அவர் குறித்து விசாரித்தபோது அவர் ஒரு மாதம் விடுப்பில் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் எப்போது பணியில் சேர்வார் என்பது தெரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் வரும் வெள்ளிக்கிழமை ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகக்கோரி சிபிஐதரப்பில் நோட்டீஸையும் கடிதத்தோடு அளித்தனர். மேலும், கைது செய்வதற்கு தடையில்லை என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் கடிதத்தோடு இணைத்து சிபிஐ அதிகாரிகள் அளித்துள்ளனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x