Published : 16 Sep 2019 12:17 PM
Last Updated : 16 Sep 2019 12:17 PM

காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சரத் பவார்: முதல்வர் பட்நாவிஸ் தாக்கு

சத்தாரா

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததன் மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்து போட்டியிட்டன. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்ளகிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து இருகட்சிகளும் ஆட்சி நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அங்கு தற்போது ஆளும் பாஜக- சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதுபோலவே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஓரணியில் தேர்தலை சந்திக்கவுள்ளன.
இரு அணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு எட்டப்படும் என முதல்வர் பட்நவிஸ் கூறியுள்ளார்.
சத்தாராவில் மஹா ஜனதேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் முடிவு எட்டப்படும்" என்றார்.

தேர்தல் ஆதாயம் தேடும் சரத் பவார்..

தொடர்ந்து பேசிய முதல்வர், "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இதில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பிருதிவிராஜ் சவானின் நிலைப்பாடு என்னவென்பதையும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர் சரத் பவாரின் நிலைப்பாடு வேறாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

சரத் பவாரைப் போன்ற மூத்த தலைவர்கள் தங்களில் கருத்துகளில் கவனமாக இருக்க வேண்டாமா? ஒரு கருத்து, பாகிஸ்தானுக்கா? இல்லை இந்தியாவுக்கா? யாருக்கு ஆதாயம் தேடித்தரும் என்பதில் அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?. இதுபோன்ற கருத்துகளை தேர்தல் ஆதாயத்துக்காகவே சரத் பவர் பேசியிருக்கிறார்" என்று பட்நாவிஸ் கூறினார்.

சரத் பவார் சொன்னது என்ன?

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அண்மையில் தான் மேற்கொண்ட பாகிஸ்தான் பயண அனுபவம் குறித்து மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர், "பாகிஸ்தான் நாட்டவர் இந்தியாவுக்கு வர இயலாமல் போகலாம். ஆனால் இந்தியர்களை பாகிஸ்தான் மக்கள் உறவினர்களாகவே பார்க்கின்றனர். பாகிஸ்தான் குறித்த மத்திய அரசின் தகவல்கள் தவறானவை.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கவே செய்யும்" எனப் பேசியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டியே முதல்வர் பட்நாவிஸ் இது தேர்தல் ஆதாய பேச்சு என விமர்சித்திருக்கிறார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x