Published : 16 Sep 2019 11:11 AM
Last Updated : 16 Sep 2019 11:11 AM

தெலங்கானாவில் யுரேனியம் சுரங்கம்? முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்ப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவின் அம்ராபாத் புலிகள் சரணாலயத்தில் யுரேனியம் தாது வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 4,000 போர்வெல் துளைகள் அமைத்து யுரேனியம் குறித்து ஆய்வு நடத்த மத்திய அணு சக்தி துறையின் கீழ் செயல்படும் அணு தாதுக்கள் இயக்குநரகம் (ஏஎம்டி) திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏஎம்டி சார்பில் தெலங்கானா அரசிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தற்போது முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. யுரேனியம் சுரங்கம் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கூறியதாவது:

யுரேனியம் சுரங்கம் திட்டத்துக்கு தெலங்கானா அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது. இந்த திட்டத்தால் அம்ராபாத் புலிகள் சரணாலயம் அழிக்கப்படும். அங்கு பாயும் கிருஷ்ணா நதி மாசடையும். ஹைதராபாத்தின் குடிநீர் தேவையை கிருஷ்ணா நதியே பூர்த்தி செய்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் யுரேனியம் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஒருவேளை மத்திய அரசு நெருக்கடி கொடுத்தால்கூட ஒட்டுமொத்த மாநிலமும் எதிர்த்துப் போரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x