

புதுடெல்லி
கடும் எச்சரிக்கைக்குப் பிறகும் டெல்லியில் அரசு பங்களாக்களை 82 முன்னாள் எம்.பி.க்கள் இன்னும் காலி செய்யாமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவையின் பதவிக் காலம் முடிந்தபிறகு அவையை குடியரசுத் தலைவர் கலைத்துவிடுவது வழக் கம். அதன்படி, 16-வது மக்கள வையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே மாதம் 25-ம் தேதி கலைத்தார். அதிலிருந்து ஒரு மாதத்துக்குள் டெல்லியில் லூடியன்ஸ் பகுதியில் இருக்கும் அரசு பங்களாக்களை முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்திருக்க வேண்டும். ஆனால், 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்யாமல் இருந்தனர். ஒரு வாரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் 3 நாட்களில் தண்ணீர், மின்சாரம், காஸ் வசதிகள் நிறுத்தப்படும் என்றும் நாடாளுமன்ற வீட்டுவசதிக் கமிட்டி கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது.
அதன்பின், பெரும்பாலான முன்னாள் எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்தனர். ஆனால், இன்னும் 82 முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்யாமல் உள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பங்களாக் களை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக பொது இடங்கள் ஆக்கிரமிப்பு சட்டத் தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் நாடாளுமன்ற வீட்டு வசதிக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி.க்கள் பங்க ளாக்களை காலி செய்யாததால் இப்போதைய எம்.பி.க்கள் பலர் அரசு விருந்தினர் விடுதிகளில் தங்கி உள்ளனர்.