

சண்டிகர்
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஹரியாணாவில் அமல்படுத்துவோம் என்று அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சட்டவிரோத மாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இந்த பதிவேடு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன. அவர்கள் உரிய ஆவணங்களை அளித்து தங்கள் பெயரை பதிவேட்டில் சேர்க்க 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப் பட்டிருக்கிறது.
இதன் பிறகும் இந்திய குடியுரி மையை நிரூபிக்க முடியாதவர்கள் அசாமில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மையங்களில் அடைக்கப் படுவார்கள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோல நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந் நிலையில் பாஜக ஆளும் ஹரி யாணாவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பஞ்ச்குலா நகரில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
ஹரியாணாவில் 2.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் எனது குடும்ப உறுப்பினர்களைப் போல பாவிக் கிறேன். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வரு கிறது. அசாமை போன்று ஹரியா ணாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்டறியப்படு வார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி பல்லாவை சந்தித்துப் பேசினேன். மாநிலத்தில் சட்ட ஆணையம் அமைக்க அவர் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹரியாணாவில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. முதல்வர் மனோகர் லால் கத்தார், மாநிலத்தின் முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரி வருகிறார்.