

புதுடெல்லி
அப்பா, உங்களை எந்த 56-ஆலும் தடுத்து நிறுத்த முடியாது என தந்தை ப.சிதம்பரத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் மகன் கார்த்தி சிதம்பரம்.
தனது தந்தை ப.சிதம்பரத்தின் 74-வது பிறந்தநாளை ஒட்டி அவரது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் தளத்தில் 2 பக்க கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ப.சிதம்பரம் சிறை சென்ற பின்னர் நாட்டில் நடந்தவற்றை விளக்கிக் கூறுவதுபோல் அவர் பல்வேறு விஷயங்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
பிரதமர் மோடியையும், பாஜக அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டத்தையும் வெகுவாக சாடியிருக்கிறார்.
கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
அப்பா, நீங்கள் இன்று 74 வயதை எட்டியுள்ளீர்கள் உங்களை எந்த 56-ஆலும் தடுத்து நிறுத்த முடியாது. ( பிரதமர் மோடி 56 இன்ச் மார்பகம் கொண்ட துணிச்சல்காரர் என ஒருமுறை அமித் ஷா பாராட்டியிருந்தார். அதிலிருந்து மோடியை 56 இன்ச் மார்பகக்காரர் என்று அவ்வப்போது எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கமானது. இன்று கார்த்தி சிதம்பரமும் சூசகமாக மோடியை சாட எந்த 56-ஆலும் உங்களைத் தடுக்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்)
உங்களுக்கு எப்போதுமே உங்களுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதில் நாட்டமிருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் நம் நாட்டில் சிறுசிறு விஷயங்கள்கூட பெரிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. (பாஜகவின் 100 நாள் கொண்டாட்டத்தை சாடுகிறார்)
இந்தப் பிறந்தநாளில் நீங்கள் எங்களுடன் இல்லை என்பது எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். வீடு திரும்பினாலும்கூட நீங்கள் ஒருபோதும் மவுனியாக இருக்க மாட்டீர்கள்.
உங்களுக்குச் செய்தித்தாளும், குறைந்த நேரம் தொலைக்காட்சி பார்க்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.
ஆனால், இன்று 74-வது பிறந்தநாளை எட்டியிருப்பது என்பது 100-வது நாளை எட்டுவதுடன் தொடர்புபடுத்தும்போது மிகச் சிறியது என்றே சொல்ல வேண்டும். பாஜக அரசு தனது ஆட்சியின் 2-ம் பாகத்தின் 100-வது நாளைக் கொண்டாடும் விதத்தைத்தான் சொல்கிறேன்.
உங்களை மவுனமாக்க அவர்களுக்கு இதைவிட நல்ல தருணம் கிடைத்திருக்காது. நீங்கள் சிறை சென்ற பின்னர் வெளியில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
நாடகம் அன்றோ நடந்தது..
சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால், அது முடியவில்லை.
இங்கே, விக்ரம் லேண்டர் தரைக் கட்டுப்பாட்டு தளத்துடன் தொடர்பை இழந்ததற்குப் பின்னர் ஒரு பெரிய நாடகமே அரங்கேறியது.
இஸ்ரோ தலைவர் சிவன் சந்திரயான் மிஷன் இலக்கை எட்டாத காரணத்தால் கவலையில் இருந்தார். பிரதமர் மோடி தனக்கே உரித்தான பாணியில் சிவனின் தலையை தன் மீது சாய்த்து ஆறுதல் கூறினார். அந்த நாடகத்தை நீங்கள் தவறவிட்டீர்கள்.
அப்புறம், பொருளாதார மந்தநிலைக்கு சாக்குபோக்கு சொல்ல, பியூஷ் கோயல் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததன் பெருமையை நியூட்டனிடமிருந்து பறித்து ஐன்ஸ்டீனிடம் கொடுத்தார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜிடிபி ( நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5%மாக சரிந்ததைக் கொண்டாடுகிறார்.
இன்னொருபுறம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு புதுயுக மக்கள் சொந்தமாக வாகனம் வாங்காமல், வாகன சேவை ஆப்களைப் பயன்படுத்துவதே காரணம் என்கிறார்.
காஷ்மீர் ஆப்பிள்களை நேரடி கொள்முதல் செய்வதாக மத்திய அரசு அறிவிக்கிறது. அங்கே ஆப்பிள்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு 40 நாட்களாக மக்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அடுத்தது காஷ்மீர் தரை விரிப்புகள் பற்றி பேசுவார்கள்.
இங்கே இத்தனை நடந்தாலும் நீங்கள் உங்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட அரசியல் நாடகத்தை உடைத்தெரிந்து துப்பாக்கியிலிருந்து வெளியே வரும் தோட்டாவைப் போல் வெளியே வருவீர்கள் என நம்புகிறோம். வாய்மை வெல்லும் அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தனது இரண்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
- ஏஎன்ஐ