

ஹைதராபாத்
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 12 பேர் நீரில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தனர். மாயமான 32 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விதிமுறைகள் மீறப்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்து விசாரிக்க மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது தேவிப்பட்டினம் பகுதி. இங்குள்ள கச்சுலுரு கிராமத்தில் அமைந் திருக்கும் பாப்பிகொண்டலு மலைப் பிரதேச பகுதியானது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், கச்சுலுரு கிராமத்துக்கு வழக்கம் போல நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள கண்டி போச்சம்மா கோயிலில் இருந்து பாப்பிகொண்டலு பகுதிக்குச் செல்ல படகு போக்குவரத்து சேவை உள்ளது. இதனிடையே, கோதாவரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக பலத்த மழை பெய்து வந்ததால், ஆற்றில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதகாலமாக இங்கு படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கு நின்றதால், நேற்று அங்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.
இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள், படகுகள் மூல மாக பாப்பிகொண்டலு பகுதிக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில், 'ராயல் வசிஷ்டா' என்ற சுற்றுலா படகில் பாப்பி கொண்டலுவுக்கு செல்வதற்காக 61 பேர் புறப்பட்டனர். அவர்களில் 11 பேர் படகு ஊழியர்கள் ஆவர். ஆரம்பத்தில் சீராக சென்றுக் கொண்டிருந்த படகு, எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டது. இதனால், அங்குமிங்குமாக படகு தள்ளாடியது.
விபரீதத்தை உணர்ந்த சுற்றுலா பயணிகள், பயத்தில் அலறினர். இந்தக் காட்சியை, கரையில் இருந்த வர்களும் கண்டு கூச்சலிட்டனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத் துக்குள்ளாக, ஆற்றில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் 17 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தும், தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 2 குழுவினர், படகின் மூல மாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், நீரில் மூழ்கிய 12 பேரின் சடலங்களை மட்டுமே அவர் களால் மீட்க முடிந்தது. மாயமான மற்ற 32 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன. மீட்புப் பணிக்காக கடற்படை யின் உதவியை ஆந்திர அரசு கோரியுள்ளது.
பிரதமர் இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள் ளார். மேலும், மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், விதிமீறல்களில் ஈடுபட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில், மாயமானவர்களை மீட்கும் பணிக்காக கடற்படை ஹெலிகாப்டர் கிழக்கு கோதாவரிக்கு விரைந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. எனினும், இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட் டிருப்பதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், மீட்புப் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணியில் கூடுதலான எண்ணிக்கையில் மாநிலப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.