Published : 15 Sep 2019 06:40 PM
Last Updated : 15 Sep 2019 06:40 PM

குடியிருப்பு இடிப்பு உத்தரவை எதிர்த்து உண்ணாவிரதம் தொடங்கிய மராடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

கொச்சி,

கேரளா, உள்ள மராடுவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தை வரும் 20ந் தேதிக்குள் இடிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குடியிருப்பு வாசிகள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

கொச்சி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மராடு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு அரபிக் கடலின் கழிமுக ஆற்றங்கரையில் கட்டப்பட்டதாகும். இக்கட்டிட வளாகத்தில் உள்ள ஐந்து கட்டிடங்களில் 356 குடியிருப்புகள் உள்ளன, 240 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் அதை இடிக்கவேண்டுமென கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், செப்டம்பர் 23 ம் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன் ஆஜராகுமாறு கேரள தலைமைச் செயலாளரை உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது.

அதன்பிறகு, மராடு நகராட்சி சனிக்கிழமைக்குள் (நேற்றே) வளாகத்தை காலி செய்ய பிளாட் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியநிலையில். அவர்கள் யாரும் இன்னும் கட்டிடத்தைவிட்டு காலி செய்யவில்லை.

மாறாக, பிளாட் உரிமையாளர்கள் இன்றுமுதல் தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த வளாகத்திற்கு அனுமதி அளித்த மராடு உள்ளாட்சி அலுவலகங்களை எதிர்த்து நாளை (திங்கள்கிழமை) முதல் அவர்கள் போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து மராடு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், "நான் இங்கு தங்கியிருந்த ஒருவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிளாட் வாங்கினேன். நான் அதை வாங்கியபோது, ​​பில்டர் யார் என்று நான் பார்க்கவில்லை, ஆனால் ஆவணங்கள் மற்றும் பல்வேறு வரி ரசீதுகள் போன்றவற்றைக் கடன் கொடுத்த வங்கியும் சரிபார்த்தது. தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது கேரள அரசின் பொறுப்பு'' என்று மிகவும் கோபத்துடன் தெரிவித்தார்.

இதற்கிடையில். நகராட்சி செயலாளர் ஆரிஃப் கான் கூறியதாவது:

''பிளாட் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்கள் கடமைகளை நிறைவேற்றியுள்ளோம். ஆனால் யாரும் அதற்கு இணங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை, பில்டர்ஸ் நேரில் வந்தனர். குடியிருப்புவாசிகள் குறித்த நிலையை மராடு நகராட்சிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பொறுப்புகள் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்து விட்டன, தற்போதைய நிலைமைக்கும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை'' இவ்வாறு ஆரிஃப் கான் தெரிவிததார்.

இதுகுறித்து அடுக்குமாடிக் குடியிருப்பின் பில்டர்கள் கூறுகையில், ''செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் நாங்கள் சரியாக செலுத்தியுள்ளோம். அதன்பிறகு இனி அங்கு ஏற்படும் எந்தப் பிரச்சினைக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாத நிலையில் உள்ளோம்.'' என்றும் கூறினார்.

ஒருபக்கம் பில்டர்ஸ் கைவிரித்துவிட இன்னொருபக்கம் நகராட்சி நெருக்க தீவிரமான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மராடு குடியிருப்புவாசிகள் நிலை குறித்து ஆலோசிக்க வரும் செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாடு செய்துள்ளார்.

-ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x