

ஆப்கானிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி நடத்திய தலிபான் தீவிரவாத தலைவர் முல்லா ஒமர் மரணம் அடைந்துவிட்டதாக ஆப்கன் அரசு, உளவுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பிபிசி செய்தியில், “இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு முன் முல்லா ஒமர் இறந்திருக்கலாம். இதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடப் போவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் முல்லா ஒமர் இறந்து விட்டதாக பல முறை செய்திகள் வெளியாயின. எனினும் இந்த முறைதான் முல்லா ஒமர் மரணம் குறித்து ஆப்கன் அரசின் உயரதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
முல்லா ஒமரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.