

புதுடெல்லி,
ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர்
கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு இன்று நண்பகல் பாபிகொண்டலு பகுதியில் இருந்து 50 பயணிகள், 11 ஊழியர்களுடன் புறப்பட்டது, படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் வந்தபோது, நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
படகு ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீட்புப்படையினரின் மீட்பு நடவடிக்கையில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளனர். 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர், போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கடற்படை ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆற்றில் படகு கவிழ்ந்து 11பேர் இறந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், " ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவிக்கிறேன். சோக நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் படகு கவிழ்ந்தது குறித்து கூறுகையில் " ஆந்திராவில் கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க நான் இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.