

அமராவதி
ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் நீரில் மூழ்கி பலியானார்கள். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இன்று நண்பகல் பாபிகொண்டலு பகுதியில் இருந்து 50 பயணிகள், 11 ஊழியர்களுடன் புறப்பட்டது, படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் வந்தபோது, நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
படகு ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீட்புப்படையினரின் மீட்பு நடவடிக்கையில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளனர். 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதுதவிர கடற்படை ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு படையினர், போலீஸாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு கோதாவரி போலீஸ் எஸ்.பி. அத்னன் நயீம் அஸ்மி கூறுகையில், "படகில் 50-க்கும் மேற்பட்டோர் ராஜமமுந்திரி அருகே இருக்கும் பாபிகொண்டலு சுற்றுலா பகுதிக்கு சென்றுள்ளார்கள். ஆற்றில் படகு வந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில் 10 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்கள். இது சம்பவம் குறித்து அறிந்ததும் துரிதமாக மீட்புப் நடவடிக்கையில் ஈடுபட்டோம் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 14 பயணிகள் தெலங்கா மாநிலம் கடிபிகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். கோதாவரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் அனைத்து படகுகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் முத்தம்செட்டி ஸ்ரீநிவாசராவ் கூறுகையில், " ஆற்றில் மூழ்கிய படகிற்கு சுற்றுலாத்துறை அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால், காக்கிநாடா துறைமும் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
உள்துறை அமைச்சர் எம். சுசாரித்தா கூறுகையில், " தவறு செய்த அதிகாரிகள்மீதும், படகிற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, ரூ.10லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
ஏஎன்ஐ