Published : 15 Sep 2019 05:10 PM
Last Updated : 15 Sep 2019 05:10 PM

உ.பி.யில் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உடைந்த பாலத்தின்மீது செல்லும் மக்கள்

பாஸ்டி (உ.பி)

எப்போதோ பெய்த மழையில் சரிந்த ஆற்றுப்பாலம் இன்னும் சரி செய்யப்படாத நிலையில் உ.பி.யைச் சேர்ந்த கிராமம் ஒன்றின் சுற்றுவட்டார மக்கள் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.

பாஸ்டி கோட்டத்தைச் சேர்ந்த மஜா கலான்கிராமத்திற்கு அருகில் உள்ள இப்பாலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10, 12 கிராமங்களை இணைக்கும்பாலமாகவும் விளங்குகிறது. பள்ளிக் குழந்தைகள், மற்ற ஊர்களில் வசிக்கும் விவசாயிகள் உள்ளிட்ட கிராமவாசிகள், பெண்கள் எனப் பலரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இந்த உடைந்த பாலத்தைக் கடக்கின்றனர்.

மஜா கலானில் வசிக்கும் வேத பிரகாஷ் இதுகுறித்து கூறியதாவது:

''உடைந்துள்ள இப்பாலத்தின் மீதுதான் ஒவ்வொருநாளும் மாணவர்கள் நடந்துசென்று தங்கள் பள்ளிகளை அடைகின்றனர். மக்கள் சாதாரணமாக செல்லும் தங்கள் அன்றாட பயணங்களுக்காக இப்பாலத்தையே நாடுகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காகத்தான் பயப்படுகிறோம். மழை பெய்யும்போதுகூட எங்களுக்கு செல்வதற்கு வேறு பாதைகள் இல்லாததால் இந்தப் பாலத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.'' என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த அமர்ஜித் என்பவர் பேசுகையில், ''ஒரு மாணவன் சைக்கிளில் பாலத்தைக் கடக்கமுயன்றபோது தவறி ஆற்றில் விழுந்தான். ஆனால் அதிகாரிகள் அதன்பிறகுகூட புதியதாக ஒரு பாலத்தை கட்டித்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என்றார்.

பாஸ்டி கோட்ட ஆணையர் அனில் சாகர் இதுகுறித்து கூறியதாவது:

பாலம் உடைந்தது குறித்து எந்த கோரிக்கையும் மனுவும் எங்களுக்கு இதுநாள்வரை கிடைக்கவில்லை. ஒரு உடைந்த மரப்பாலத்தை அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வருவதே எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இனி நாங்கள் அதுகுறித்து ஆய்வு செய்ய உள்ளோம். முதலில் அங்குள்ள மக்கள் போக்குவரத்து அடர்த்தி என்னவாக இருக்கிறது என்று பார்க்கப்படும். ஒரு பாலம் கட்டுவதற்கு முன், அருகிலுள்ள கிராமங்களில் போக்குவரத்து நிலைமையை நாம் முதலில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதற்கேற்ப தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு பாஸ்டி கோட்ட ஆணையர் தெரிவித்தார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x