

புதுடெல்லி
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான 1.66 லட்சம் பலாத்கார, போக்ஸோ வழக்குகளை தீர்க்க ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு சிறப்பு விரைவு நீதிமன்றமும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 165 வழக்குகளுக்கு தீர்ப்பளித்தால், தேங்கியுள்ள வழக்குகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நீதித்துறை கருதுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பலாத்கார, போக்ஸோ வழக்குகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட உள்ள 1,023 விரைவு நீதிமன்றங்களில் இதுவரை 389 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 634 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் பலாத்கார வழக்குகளையும், அல்லது பலாத்காரம் மற்றும் போக்ஸோ வழக்குகள் இரண்டையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். ஒவ்வொரு விரைவு நீதிமன்றமும் ஒவ்வொரு காலாண்டில் 41 முதல் 42 வழக்குகளை விசாரித்து முழுமையாக தீர்ப்பளித்தால், ஆண்டுக்கு 165 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீதித்துறையின் கணக்கீட்டின்படி, நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் போக்ஸோ வழக்கு, பலாத்கார வழக்கில் ஒருலட்சத்து 66 ஆயிரத்து 882 வழக்குகள் தேங்கியுள்ளன.
100 போக்ஸோ வழக்குகளுக்கு மேல் தேங்கியுள்ள மாவட்டங்கள் மட்டுமே நாட்டில் 389 உள்ளன. உச்ச நீதமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த மாவட்டங்களில் அனைத்தும் போக்ஸோ வழக்குகளை விசாரிப்பதற்காகவே மட்டும் தனியாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும், வேறு எந்த வழக்கையும் இந்த நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது.
இந்த சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் பணிகள் வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் என்று சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.767.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிர்பயா நிதி மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.474 கோடியை மத்தியஅரசு ஒதுக்க உள்ளது.
பிடிஐ