

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது அடிப்படை தேவைகளுக்காக வாரம் ஆயிரத்து 500 ரூபாயை குடும்பத்தாரிடம் இருந்து பெற்று வருகிறார்.
வாரம்தோறும் ரூ.1500 பெறும் சிதம்பரம், அந்த பணத்தில் பெரும்பாலும் டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாங்கிக் கொள்கிறார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 1449 என்று கைதி எண்ணும், சிறையில் 7-வது அறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் சரண் அடைய விருப்பம் தெரிவித்து சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிதம்பரத்தை இப்போதுள்ள நிலையில் கைது செய்ய விருப்பமில்லை, அவரின் மனுவை பரிசீலிக்க அவசியமில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவை சிதம்பரத்துக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக் கொண்டபோது அதை நீதிமமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் சிறையில் சமைக்கப்பட்ட உணவுகளை ப.சிதம்பரம் சாப்பிட்டு வருகிறார். சிறையில் தனது அடிப்படைத் தேவைகளுக்காக சில நூறுரூபாய்களை தனது குடும்பத்தாரிடம் வாரம் தோறும் எதிர்பார்த்துள்ளார்.
இதுகுறித்து திஹார் சிறை வட்டாரங்கள் நிருபரிடம் கூறுகையில், " சிறையில் நீதிமன்றக் காவலிலோ அல்லது தண்டனை பெற்று கைதியாக இருப்பவரின் அடிப்படைத் தேவைகளுக்காக வாரம் ரூ.1500 அவரின் குடும்பத்தார் வழங்க முடியும். இது சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு பணம் டெபாசிட் செய்துவிட்டால், அந்த கைதிக்கு நம்பர் இல்லாத ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அந்த கார்டைக் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் தேவையான பொருட்களை அந்த கைதி சிறையில் உள்ள கேண்டீனில் வாங்கிக்கொள்ள முடியும். சிறையில் கைதிகள் பணம் வைத்துக்கொள்ள அனுமதியில்லை.
இதேபோலத்தான் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு வாரம் 1500 ரூபாயை அவர்களின்குடும்பத்தினர் வழங்குகிறார்கள். அந்த பணத்தின் மூலம் அவர் சிறையில் தனது அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குகிறார். பெரும்பாலும் தனக்குரிய பணத்தில் சிதம்பரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முகச்சவரம் செய்யவும் பயன்படுத்துகிறார். திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து சிதம்பரம் பணத்தை பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்