Published : 14 Sep 2019 09:04 PM
Last Updated : 14 Sep 2019 09:04 PM

மசூரியின் அரசு குடிமைப்பணி பயிற்சி நிலையத்தின் ’மாநில தினம்’ கொண்டாட்டத்தில் தமிழகம்

புதுடெல்லி:, ஆர்.ஷபிமுன்னா

உத்தராகண்ட் மாநிலத்தில் மத்திய அரசின் குடிமைப்பணி பயிற்சி நிலையத்தின் ‘மாநில தினம்’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், நேற்றைய மாநிலமாக தமிழ் நாடு இடம் பெற்றது.

இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும் அதிகாரிகளுக்குப் மசூரியின் 'லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாதமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்' ( Lal Bahadur Shastri National Academy of Administration)-ல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் சிறந்த பயிற்சி மையமான இங்கு அடிப்படை பயிற்சி பெற்ற பின்னரே ஒதுக்கீடு செய்யப்படும் மாநிலங்களுக்கு அதிகாரிகள் பணி அமர்த்தபடுகின்றனர்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பிற மாநிலங்களின் கலை, பண்பாடு, வாழ்க்கை முறையில் உள்ள பழக்க வழக்கம் ஆகியன குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பாக ஒவ்வொரு மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த ஆண்டு முதல் அந்நிகழ்ச்சி அகாதமியால் மிகவும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பண்பாட்டையும் பயிற்சி அதிகாரிகள் அறிந்து கொள்ளும் வகையில் ‘மாநில தினம்’ என அனுசரிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் தமிழ்நாடு தினம் நேற்று செப்டம்பர் 13-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்ப்பண்பாடு, கலைகள் ஆகியவற்றைப் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் பிரதிபலிக்கச் செய்யப்பட்டது. அதன் கட்டிடங்கள் மீது தமிழ் கலாச்சார முறையில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானைகளுடன் தமிழகத்தின் பாரம்பரிய வரவேற்பு முறையில் பெண்கள் புடவை அணிந்து விருந்தினர்களை வரவேற்பதும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதற்காக, அகாதமி சார்பில் தமிழ் நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் ஹிதேஷ் குமார் எஸ்

மக்வானாவிடம் கோரப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் புதுடில்லியின் தமிழ்நாடு இல்லத்திலிருந்து 12 அலுவலர்கள், தமிழ் கலாச்சார உணவு தயாரிக்கும் திறன்வாய்ந்த 5 சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட ஒரு குழு கலந்துகொண்டது. இதன் மேற்பார்வை பணிகளை இளம் பயிற்சி அதிகாரியான வி. .அபிஷேக் செய்திருந்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய குடிமைப்பணிக்கு தேர்வான பலரும் தங்களது பாரம்பரிய உடையில் தமிழ்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இவர்கள், தங்களது பண்பாட்டு கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக மேடையில் சிலம்பம் மற்றும் கிராமிய நடனங்களை ஆடியும் விருந்தினர்களை மகிழ்வித்தார்கள்.

தற்போது நடப்பு ஆண்டான 2019 ஆம் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 12, ஐபிஎஸ் 2, ஐஎப்எஸ் 4 ஆகியோருடன் இதர ரயில்வே மற்றும் கணக்குத்துறைக்கு தேர்வானவர்கள் என மொத்தம் 22 பேர் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பயிற்சியில் உள்ளார்கள்.

அகாதமியின் இயக்குனரான சஞ்சீவ் சோப்ராவும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பட்டு வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டார். சிறப்பு இயக்குனர்கள் ஆர்த்தி அகுஜா. மனோஜ் அகுஜா, இளம் பயிற்சி அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம் குறித்த பயிற்சியை வழங்கக்கூடிய தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக அமுதா மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுதான்சு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த தமிழ்நாடு ’மாநில தினம்’ நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் சிறிய காட்சி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள் தமிழ் நாட்டின் கலாச்சார கைவினைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x