Published : 14 Sep 2019 07:08 PM
Last Updated : 14 Sep 2019 07:08 PM

ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள் பேசுவதே தேசிய மொழியாக்கப்படுகிறது –இந்தி அறிஞர் கோவிந்தராஜன் பேட்டி

புதுடெல்லி:

ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள் பேசுவதே தேசிய மொழி என்றாக்கப்படுவதாக இந்தி மொழி அறிஞரும் தமிழருமான முனைவர் எம்.கோவிந்தராஜன் கூறியுள்ளார். இந்தி மொழி அறிஞரான கோவிந்தராஜனிடம், ’இந்து தமிழ் திசை’ இணையத்திற்காக இன்றைய ’இந்தி நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட சிறப்பு பேட்டி இது.

கேள்வி: இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி, அதுவும் இந்தி தான் இருக்க வேண்டும் என இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருப்பது சரியா?

பதில்: அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள் பேசும் மொழியே நம் நாட்டின் தேசிய மொழியாக இருந்து வருகிறது. உதாரணமாக, அசோகர் காலத்தில் சமஸ்கிருதமும், புத்தர் காலத்தில் பாலி மொழியும், பாரசீகத்தவரின் காலத்தில் பாரசீகமும், முகலாயர் காலத்தில் உருது மற்றும் அரபி மொழியும், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமும் இருந்தது. அதுபோல், இன்றைய சுதந்திர இந்தியாவில் இந்தி பேசும் ஆட்சியாளர்களால் அம்மொழி தேசிய மொழியாக்க முயற்சிக்கப்படுகிறது.

இதுபோல் ஒரே மொழியால் தான் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலத்தவர்கள் தங்களுக்குள் தடையின்றி பேசிக் கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டின் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தி எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும் என்றால் ஏற்க முடியாது.

கேள்வி: உலகின் பழமையான மொழியாகக் கருதப்படும் தமிழ் ஆட்சிமொழியாக்க என்ன வழி?

பதில்: தமிழுக்கு முதன்முதலாக செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்ட போது தென்னிந்தியாவின் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஆகியவையும் அதை போராடிப் பெற்றன. இதுபோல், தமிழை ஆட்சிமொழியாக்க அதை வேறாக வைத்து வளர்ந்த மொழிகளே கடுமையாக எதிர்ப்பார்கள். இவர்கள் எதிர்ப்பை மீறி தமிழ் தேசியமொழியாக்க தமிழன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் தான் அது சாத்தியம் ஆகும்.

கேள்வி: மத்திய அரசின் தற்போதைய நிலைபாட்டினால் இந்தி எதிர்ப்பு மீண்டும் கிளம்பும் போல் தெரிகிறதே?

பதில்: 1965 ஆம் வருடம் வரை இந்திக்கான எதிர்ப்பை நானும் ஆதரித்து வந்தேன். எனினும் தற்போதைய சூழலில் இந்தித் திணிப்பு என்பது பழைய பல்லவியாகவும், தேவை இல்லாத ஒன்றாகவும் தோன்றுகிறது. அன்று ஒரு மாயையாக இருந்த இந்தி எதிர்ப்பை இன்றைய மக்கள் ஏற்கவில்லை.

ஏனெனில், இந்தியை எதிர்த்தவர்களின் வாழ்க்கை உயர்த்தப்படவில்லை. தமிழை மட்டுமே எடுத்து படித்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. .

கேள்வி: சுதந்திரத்திற்கு பிறகும் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்த இந்தி, அதில் இருந்து நீக்கப்பட்டது எப்போது?

பதில்: 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பள்ளிகளிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் இருந்து இந்தி படிப்படியாக நீக்கப்பட்டது. இதனால், வேலை இழக்கும் இந்தி ஆசிரியர்கள் வேலையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் அவரவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப ஒரு மாற்று வேலை கொடுத்து பணியில் அமர்த்தினர். அதேசமயம், பிற்காலத்தில் தனியாரால் நடத்தப்பட்டு வரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் இருந்தும் இந்தி ஆசிரியர்கள் பணியிழக்க வேண்டிய சூழலையையும் அவர்கள் உருவாக்கினர்.

கேள்வி: இந்தி பயின்றவர்களின் வேலை வாய்ப்பு நிலை என்ன?

பதில்: இந்தி தெரிந்திருந்தால் தமிழர்கள் இன்று வட மாநிலங்களில் கொடி கட்டிப் பறந்து இருக்கலாம். தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதை வட மாநிலத்தவர் மிகவும் விரும்புகின்றனர். தமிழகத்தின் அரசியல்வாதிகள் டெல்லிக்கு வரும் போது இந்தி தெரியாமல் தவிப்பதை எளிதாகக் காண முடியும்.

நாடாளுமன்ற இருஅவைகளிலும் கூட அதன் தமிழக உறுப்பினர்களால் இந்தி அறியாமல் தன் முழு உணர்வுகளையும் அங்கு வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.

கேள்வி: வட இந்தியாவில் ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு உள்ளதே?

பதில்: தொலைநோக்கு பார்வை இல்லாமல் வட இந்தியாவில் ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது, இந்தியினால் தமிழ் அழிந்து விடும் என்ற தவறானக் கருத்தை போலானது. எந்த ஒரு மொழியையும் மற்றொரு மொழி எக்காலத்திலும் அழிக்க முடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவு உள்ளவரை ஒரு மொழி அந்த அரசின் தேசிய மொழியாகி விடுகிறது.

கேள்வி: தமிழ் மொழியில் பல சிறந்த இலக்கியங்கள் இருந்தும் அவை வட மாநிலங்களில் புகழ் பெறாமல் இருக்க இந்தி தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: இதற்கு, நமது இலக்கியங்களை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழி பெயர்த்து விற்கப்பட வேண்டும். இத்துடன், நம் மாநிலத்தின் அரசு மொழிக்கொள்கையும் மாற்றி அமைக்கப்படுவது முக்கியம். அப்போது தான், தமிழ் இலக்கியங்கள் நம் நாட்டில் தேசிய அளவில் புகழ் அடைய முடியும். தமிழில் தரமான நூல்களுக்கும், சிறந்த எழுத்தாளர்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. அப்படியிருக்க மற்ற மாநில மொழிகளை போன்ற விருதுகள், தமிழ் நூல்களுக்கும் கிடைக்க அவை, இந்தியில் மொழி பெயர்க்கப்படுவது அவசியம்.

கேள்வி: இந்த நிலையை மாற்ற இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் முயற்சி எடுத்ததா?

பதில்: தேசிய நீரோட்டத்தின் அவசியத்தை உணர்ந்து கலைஞர் கருணாநிதி ஒரு முயற்சி எடுத்தார். தமிழக அரசால் ‘தமிழ் இலக்கிய சங்கப்பலகை குறள் பீடம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சிறந்த தமிழ் நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

இதில், முதலாவதாக “தமிழ் கஹானியான்” என்ற நூலில் என்னால் மொழி பெயர்க்கப்பட்ட இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. கலைஞர் எழுதிய ‘ஒரே இரத்தம்‘, உட்பட சில தமிழ் நூல்கள், மிகச் சிறந்த முயற்சியான குறள்பீடத்தின் பலனாக இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டன. ஆனால், அடுத்து வந்த ஆட்சியில் குறள்பீடம் காணாமல் போனது.

கேள்வி: தமிழரான நீங்கள் இந்தி மொழிக்கு ஆதரவளிப்பது ஏன்?

பதில்: தமிழர்கள் புதிய மொழிகளை கற்பதில் திறன் படைத்தவர்கள். அவர்கள் இந்தி கற்பதால் நிச்சயமாக தமிழ் வளருமே தவிர அழியாது. ஒரு மாநிலத்தில் ஆட்சி புரியும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் முதலமைச்சர் தம் வாகனங்களில் தமது கட்சிக் கொடியைப் பறக்க விடுவது இல்லை. மாறாக, நம் தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு அது இந்திய அரசின் அமைப்பு என்பது காரணம்.

அது போல ஒரு மாநிலம் தனது மாநில மொழிக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதை தேசிய மொழிக்கும் கொடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முனைவர்.எம்.கோவிந்தராஜன் பற்றிய குறிப்பு

இந்திய மொழிகளை ஒருங்கிணைப்பதில் பாலமாக செயல்பட உபியின் அலகாபாத்தில் 1976 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு, ’பாஷா சங்கம்’. இதில், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் மற்றும் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடி, அவர்களைப் பற்றி இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நூல்களையும் வெளியிடப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் மொழி அறிஞர்களின் சிறந்த அமைப்பாகவும் கருதப்படும் இதில் முதன் முறையாக ஒரு தமிழரான முனைவர்.எம்.கோவிந்தராஜன், பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார். இவரது தலைமைக்கு பின் தேவாரம் உட்பட பல்வேறு சங்ககால இலக்கிய நூல்கள் பாஷா சங்கம் சார்பில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் வட இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த பாஷா சங்கம், உபியின் அலகாபாத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கவும் பல ஆண்டுகளாக

முயல்கிறது. இந்த அமைப்பின் சார்பில் பாஷா சங்கம், வட மாநில கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பகுதிநேரமாக தமிழ் மொழி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

-ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x