Published : 14 Sep 2019 05:56 PM
Last Updated : 14 Sep 2019 05:56 PM

புதியமோட்டார் வாகனச் சட்டம் அமலாகும் முன்பே போக்குவரத்து விதிகளை மீறிய லாரிக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம் 


புதுடெல்லி


நாகாலாந்து பதிவெண் கொண்ட டிரக் , 7 வகையான போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.6.53 லட்சம் அபராதத்தை ஒடிசா போலீஸார் விதித்துள்ளனர்.

ஆனால், இந்த அபாராதம் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படவில்லை. புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராதம் ஆகஸ்ட் 10-ம் தேதி விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத விவகாரம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாட்டில் விபத்துகளைக் குறைக்கவும், உயிர் பலியைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.20 ஆயிரம், முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. மக்களில் ஒரு தரப்பினர் இந்தப் புதிய அபாரத முறைக்கு வரவேற்பும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

ஆனால், கர்நாடக, குஜராத், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அபராதத்தை வசூலிக்கமாட்டோம். குறைத்து வசூலிப்போம் என்று தெரிவித்துள்ளன. ஆனால், மேற்கு வங்க அரசு இந்த மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வரும்முன்பே, நாகாலாந்தைச் சேர்ந்த ஒரு டிரக்கிற்கு ஒடிசா மாநிலம், சம்பல்பூர் போலீஸார் ரூ.6.53 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

சம்பல்பூர் மண்டல போக்குவரத்து அலுவலகம் லாரி ஓட்டுநர் திலிப் கர்தாவுக்கும், உரிமையாளர் ஷைலேஷ் சங்கர் லால் குப்தாவுக்கும் அபராத ரசீது வழங்கியுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதியில் இருந்து 2019, செப்டம்பர் 30ம் தேதிவரை சாலை வரி செலுத்தவில்லை. இதனால், ஒடிசா மோட்டார் வாகன வரிச்சட்டத்தின் கீழ் ரூ.6லட்சத்து 40 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆவணங்கள் இல்லாதமைக்கு ரூ.100, உத்தரவுகளை மதிக்காதிருத்தலுக்கு ரூ.500, காற்று ஒலிமாசுக்கு ரூ.1000, சரக்கு ஏற்றும் வாகனத்தில் மனிதர்களை அமரவைத்து அழைத்தது வந்ததற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது, பெர்மிட் இல்லாமைக்கு ரூ.5000, காப்பீடு இல்லாதமைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x