முழுக்கொள்ளவை எட்டுகிறது சர்தார் சரோவர் அணை: குஜராத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழுக்கொள்ளவை எட்டுகிறது சர்தார் சரோவர் அணை: குஜராத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated on
1 min read

காந்திநகர்

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை முழுக்கொள்ளவையும் எட்டும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு கூடுதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை 110 சதவீதம் அளவுக்கு தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பரூச் உள்ளிட்ட வறண்ட மாவட்டங்களில் கூட பலத்த மழை பெய்துள்ளது.

கனமழையால் மாநிலத்தில் உள்ள 110 அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அணைகள் முழுவதும் திறந்து விடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணையும் நிரம்பியுள்ளது.

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையின் மொத்த உயரம் 138.6 மீட்டர் ஆகும். அணையில் 136 மீட்டர் உயரத்துக்கு நீர் தேக்க முடியும். அணையின் மொத்த கொள்ளவு நீர் நிரம்ப வெறும் 68 செ.மீ. அளவு மட்டுமே உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 8 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து சுமார் 8 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் நர்மதா, வதோதரா, பரூச் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 175 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in