Published : 14 Sep 2019 04:55 PM
Last Updated : 14 Sep 2019 04:55 PM

இந்தி தேசிய மொழியா? - அமித் ஷாவுக்கு சித்தராமையா, குமாரசாமி கண்டனம்

பெங்களூரு

இந்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்து கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறுகையில், " இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ எனக் கூறினார். அவரது கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தி மொழி பேசாத தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்ற பொய்யை முதலில் நிறுத்த வேண்டும். கன்னடத்தை போல நாட்டில் உள்ள 22 மொழிகளில் இந்தியும் ஒன்று அவ்வளவு தான். பொய் மற்றும் தவறான தகவலால் ஒரு மொழியை உங்களால் திணிக்க முடியாது. மொழி என்பதை ஒவ்வொருவரும் விரும்பி கற்க வேண்டுமே தவிர, யாரும் திணிக்க கூடாது’’ எனக் கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இந்தி தினத்த போல கன்னட தினத்தை எப்போது கொண்டாட போகிறீர்கள். இந்தியை போல அதுவும் ஒரு அதிகாரபூர்வ மொழி தானே. இந்த கூட்டாட்சியில் கர்நாடக மக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x