Last Updated : 14 Sep, 2019 03:57 PM

 

Published : 14 Sep 2019 03:57 PM
Last Updated : 14 Sep 2019 03:57 PM

நாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு

டெல்லியில் இன்று நடந்த இந்தி நாள் விழாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி, பிடிஐ

நாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி மொழி சென்றடைய வேண்டும் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறுகையில், " இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும், அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் டெல்லியில் நடந்த இந்தி நாள் கொண்டாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

இந்தி மொழி நாட்டில் ஒவ்வொரு இல்லத்துக்கும், ஒவ்வொரு தனிமனிதரையும் சென்றடைய வேண்டும். அடுத்த ஆண்டு இந்தி நாள் கொண்டாட்டத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட வேண்டும். நான் ஒவ்வொரு பெற்றோரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்களின் குழந்தைகளை உங்களின் தாய்மொழியில் பேசச் சொல்லுங்கள், உடன் பணியாற்றுவருடன் தாய்மொழியில் பேசுங்கள்.

2024-ம் ஆண்டு நாடு அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்கும் போது, இந்தி மொழி மிகமுக்கியமான நிலையை அடைந்திருக்கும்.
சமூகசீர்திருத்த தலைவர் ராம் மனோகர் லோகியா ஜனநாயகம் குறித்து கூறுகையில், அரசின் மொழி, மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நான் முதன்முதலில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றபோது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்புகூட என்னிடம் இந்தியில் வரவில்லை. இப்போது, 60 சதவீத கோப்புகள் என்னிடம் இந்தியில்தான் வருகின்றன.

நாம் பேசுகின்ற மொழியால் வருங்கால தலைமுறை பெருமை அடைந்தால் மட்டுமே மொழி நிலைத்து நிற்கமுடியும். பல்வேறு விதமான சமூகங்களில், மண்டலங்களில் பல மொழிகள் பேசப்படுவது நம்முடைய வலிமையை காட்டுகிறது. பாரம்பரிய மொழியை ஒரு அன்னியமொழி மீறி, கடந்து சென்றுவிடமுடியாது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்

இந்தி மொழியில் படிக்கும் ஒரு மாணவரால் 40 நிமிடங்கள் தொடர்ந்து இந்தி மொழில் பேச முடியுமென்றால் அது முடியவில்லை. ஆங்கிலத்தின் அளவுக்கமீறிய ஆதிக்கம் வந்துவிட்டது. ஆங்கிலத்தின் உதவியின்றி இந்தியில் பேச முடியவில்லை

சட்டம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தி மொழியை எடுத்துச்செல்ல வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்தி மொழியை கற்பிக்கவும், எழுதவும் மத்திய அரசு முயற்சி எடுக்கும்.

குவஹாட்டியில் கடந்த வாரம் நான் இருந்தபோது, பலரிடம் நான் தனியார் ஆசிரியர் வைத்து குழந்தைகளுக்கு இந்தி கற்றுக்கொடுங்கள் என்று தெரிவித்தேன். அங்குள்ளவர்களுக்கு இந்தி கற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஐ.நா. சபையில் இந்தி மொழியில்தான் பேசினார்கள். ஐ.நா.வில் இந்தியில் செய்திகளையும், ட்வீட்களையும் வெளியிடுவதை சுஷ்மாதான் உறுதி செய்தார்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x