Published : 14 Sep 2019 01:57 PM
Last Updated : 14 Sep 2019 01:57 PM

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீட்டிற்காக நிறுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் வாபஸ்

புதுடெல்லி,

குடிமக்களின் இறுதி தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி) வெளியிடுவதற்கு முன்பு அசாமில், நிறுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாமில் கடந்த செப்டம்பர் 1 அன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிபட்டியல் (என்.ஆர்.சி) வெளியிடப்பட்டது. இறுதி என்.ஆர்.சி வெளியிடப்படுவதற்கு முன்னதாக சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகளைப் பராமரிப்பதற்காக ஆகஸ்ட் 19 அன்று அசாமில் 218 துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் என்ஆர்சி இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதற்கு முன்னதாகவும் அதற்கு பிறகும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும்
இல்லாததால் தற்போது ராணுவப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி கூறியதாவது:

அசாமில் தொடர்ந்து அமைதி நிலவி வருவதால், உள்துறை அமைச்சகத்தால் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் நிலைமை குறித்து மீண்டும் வெள்ளிக்கிழமை. மறுஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு, துணை ராணுவப் படைகளின் 100 கம்பெனிகளை உடனடியாக திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படைகளின் 100 கம்பெனிகளில் 50 கம்பெனிகள் பி.எஸ்.எஃப், 10 சி.ஆர்.பி.எஃப், 16 ஐ.டி.பி.பி மற்றும் 24 எஸ்.எஸ்.பி. பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களை உள்ளடக்கியதாகும். ஒரு துணை ராணுவத்தின் ஒரு கம்பெனி என்பது சுமார் 100 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19லிருந்து அசாமில் காலவாரியாக நிறுத்தப்பட்ட படைப்பிரிவுகள் முறையே அவரர் நிரந்தரப் பணியிடங்களுக்கு திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

இறுதி என்.ஆர்.சி படி, மொத்த 3.3 கோடி விண்ணப்பதாரர்களில், 3.11 கோடி பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் அதாவது இந்த பட்டியல்படி அசாமில் இதுநாள்வரை வசித்து வந்த சுமார் 19 லட்சம் குடியிருப்பாளர்களின் பெயர்கள் அதில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

இறுதி என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறத் தவறியவர்களுக்கு வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் விலக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயங்களின் தீர்ப்பில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்களுக்கு உயர் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அணுக வாய்ப்பளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x