Published : 14 Sep 2019 12:54 PM
Last Updated : 14 Sep 2019 12:54 PM

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும்: அமித் ஷா கருத்து

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும். இந்தி மொழியை நம்முடைய அன்றாட பணிகளில் அதிகமாகப் பயன்படுத்தி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்

இன்று, இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக செயதல்தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், " நாடுமுழுவதும் அதிகமான பேசப்படும், புரிந்துகொள்ளப்படும் மொழியாகவும்,அனைவரையும் ஒற்றுமையின் கீழ் இந்தி மொழிதான் ஒருங்கிணைக்கிறது, உலகில் நம்முடைய அடையாளமாக இந்தி இருக்கிறது. அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள். நமது அன்றாட வாழ்க்கையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் " இந்தியை விரும்புவோம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழி இந்திதான். அனைத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், இந்தி மொழிக்கு சேவையாற்றியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தி தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x