Published : 14 Sep 2019 11:14 AM
Last Updated : 14 Sep 2019 11:14 AM

சாரதா சிட்பண்ட் வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ நோட்டீஸ்: இன்று விசாரணைக்கு ஆஜராவாரா?

கொல்கத்தா

சாரதா சிட்பண்ட் வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரைக் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக்கொண்ட சில மணிநேரத்தில் சிபிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் இல்லத்துக்கு நேற்று மாலை 5 மணிக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்துவிட்டுச் சென்றனர். ஆனால், வீட்டில் ராஜீவ் குமார் இல்லை.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் அதிக வட்டியும், இரட்டிப்பு வட்டியும் தருவதாகக் கூறி ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி குறித்து விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் தலைமையில் செயல்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை முறையாகக் கொண்டு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.

சாராதா சிட்பண்ட் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், பல ஆவணங்களைத் தரவி்ல்லை, முறையாக ஒப்படைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றபோது, சிபிஐ அதிகாரிகளுக்கும், கொல்கத்தா போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டார். சிபிஐ போக்கைக் கண்டித்து 14 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் மம்தா ஈடுபட்டார்

இதையடுத்து, தன்னைக் கைதுசெய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 24-ம் தேதி வரை ராஜீவ் குமாரைக் கைதுசெய்ய சிபிஐக்கு தடை விதித்தது.

அதன்பின் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அனுகி நிவாரணம் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அனுகி ராஜீவ் குமாரை சிபிஐ கைதில் இருந்து தடை உத்தரவை கடந்த மே 30-ம் தேதி பெற்றார். இந்தத் தடை உத்தரவை பலமறை நீதிமன்றம் நீட்டித்துக்கொண்டே வந்தது.

இந்நிலையில், கைது தடையை நீட்டிக்கக் கோரி ராஜீவ் குமார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி மதுமதி மித்ரா பிறப்பித்த உத்தரவில், "போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத் தடையை நீக்குகிறோம். தொடர்நது தடை விதிப்பது விசாரணயைப் பாதிக்கும், விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களி்ல கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை 5 மணிக்குச் சென்றனர். ஏராளமான போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

சிபிஐ விசாரணைக்கு நாளை(சனிக்கிழமை) ஆஜராக வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அளித்துவிட்டுச் சென்றனர். தற்போது விடுமுறையில் இருந்துவரும் ராஜீவ் குமார், சிபிஐ அதிகாரிகள் வரும்போது வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x