

மும்பை,
ஷா பானு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு மாற்றும்போது, மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதத்தை ஏன் திருத்த முடியாது என்று மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் விபத்துகளைக் குறைக்கவும், உயிர் பலியைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.20 ஆயிரம், முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. மக்களில் ஒரு தரப்பினர் இந்தப் புதிய அபாரத முறைக்கு வரவேற்பும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்
ஆனால், கர்நாடக, குஜராத், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அபராதத்தை வசூலிக்கமாட்டோம். குறைத்து வசூலிப்போம் என்று தெரிவித்துள்ளன. ஆனால், மேற்கு வங்க அரசு இந்த மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பாஜக ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் இன்னும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வரவில்லை. இந்த மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான அபராதம் இருப்பபதால், அதை நடைமுறைப்படுத்தும்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழக்கூடும் என்பதால் அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களின் அதிருப்தியைப் பெற வேண்டாம் என்று தாமதம் செய்து வருகிறது. இதனால் இச்சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் எந்தவிதமான அறிவிப்பும் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவத் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், " புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தை குறைக்கக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
மக்களின் உணர்வுகளை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். ஷா பானு வழக்கில் மக்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசால் திருத்தியபோது, ஏன் மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை மக்கள் நலன் கருதி திருத்த முடியாது" எனத் தெரிவித்தார்
அப்போது நிருபர்கள் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர்கள் குழுவில் நீங்களும் இருந்தீர்கள் என்று கட்கரி கூறியுள்ளாரே? அதுகுறித்துக் கூறுங்கள் என்று கேட்டனர்.
அதற்கு அமைச்சர் திவாகர் பதில் அளிக்கையில் " ஆமாம், நான் அந்த அமைச்சர் குழுவில் இருந்தேன். ஆனால், சில கூட்டங்களுக்கு என்னால் செல்ல முடியவில்லை. பல்வேறு மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் அதில் இடம் பெற்று முடிவு எடுத்தார்கள். ஆனால், இந்த முடிவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால், அது திருத்தப்பட வேண்டும்.
இப்போதுவரை மகாராஷ்டிர அரசு சார்பில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவாருங்கள் என்று கட்கரியிடம் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது குறித்து இனிமேல் முதல்வர் பட்நாவிஸுடன் பேசுவேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறுகையில், "சட்டத்தை மீறாவிட்டால் நீங்கள் அபராதத்துக்கு உள்ளாகமாட்டீர்கள். பழைய அபராதம் 30 ஆண்டுகள் பழமையானது. மக்கள் அதற்கு அச்சப்படவில்லை. சட்டத்தை மதிக்கவும் இல்லை. இந்தச் சட்டம் மக்களைக் காப்பதற்காகத்தான். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மகாராஷ்டிர முதல்வர் என்னிடம் உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஷா பானு வழக்கு என்பது இந்திய நீதித்துறையில் முக்கியமான வழக்காகும். முஸ்லிம் பெண் ஷா பானுவை விவாகரத்து செய்தாலும், அவரின் கணவர் நிவாரணம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடத்தியதால், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு, இந்தத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.