

நாளை (செவ்வாய்) தாக்கல் செய்யப்படுவதாக இருந்த நிலமசோதா குறித்த நாடாளுமன்ற இணைக்குழு அறிக்கை கால நீட்டிப்பு பெற்றுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, இரண்டாவது காலநீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது, முன்னதாக, ஜூலை 27-ம் தேதி வரை கால நீட்டிப்பு கோரியது.
இது குறித்து நிலமசோதாவின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற இணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு காலநீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதாவது 2013-ம் ஆண்டு நில மசோதாவின் மீதான திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் சில விளக்கங்கள் தேவைப்படுவதால் காலநீட்டிப்பு கோரப்பட்டுள்ளது.
இந்த விளக்கங்களுக்காக ஜூலை 16-ம் தேதி அரசுத்துறை செயலர்கள் மூன்று பேருக்கு நாடாளுமன்ற இணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் இவர்கள் அன்று வரவில்லை.
இந்த காலநீட்டிப்பு காரணமாக மீண்டும் அவசரச் சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மே 31-ம் தேதி 3-வது முறையாக நில மசோதா குறித்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடங்கி ஆகஸ்ட் 13-ல் முடிகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 3-ம் தேதியில் நாடாளுமன்ற இணைக்குழு தங்களது அறிக்கையைத் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.