

லக்னோ,
போக்குவரத்து விதிமீறல் செய்ததாக இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை அடித்து உதைத்ததாக உத்தரப் பிரதேச சித்தார்த் நகர் மாவட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2 போலீஸாரும் பைக் ஓட்டுநரை அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து இருவர் மீதும் நடவடைக்கைப் பாய்ந்துள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் விரேந்திர சிங், ஹெட் கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேபாள எல்லையருகே உள்ள சகர்பர் போலீஸ் அவுட் போஸ்ட்டில் ஆகஸ்ட் 10ம் தேதி குடித்திருந்ததாகக் கருதப்படும் பைக் ஓட்டுநரைத் தாக்கி கடும் வசையை அவர் மீது ஏவியதாக இந்தப் போலீஸார் இருவரும் வீடியோவில் சிக்கினர்.
பைக் ஓட்டுநரை கீழே தள்ளி காலைப் பிடித்து போலீசார் இழுத்துச் சென்றதோடு ஒரு போலீஸ் அவரின் தொடைகளின் மீது ஏறி நிற்க இன்னொரு போலீஸ் பூட்ஸ் காலினால் இருசக்கர வாகன ஓட்டியை கடுமையாக உதைத்தது பொதுமக்கள் முன்னிலையில் நடந்தேறியது.
இதனையடுத்து உயரதிகாரி கூறும்போது, ‘சீருடை அணிந்த இரு போலீஸாரின் மிக அசிங்கமான செயலாகும், இது சமூகத்துக்கும் போலீஸ் துறைக்கும் பேரிழுக்கை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவரும் வேலையை விட்டே அனுப்பப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.