

போபால்,
எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்துவிட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன் மழை வேண்டி திருமணம் செய்யப்படும் சடங்குக்கு ஆளான இரண்டு களிமண் தவளைகளுக்கு தற்போது விவாகரத்து செய்துவைத்த விநோத சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அங்கு தேவைக்கு அதிகமாகவே மழை பொழிந்து இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் மழைவேண்டி இந்திரபுரி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்த ஓம் சிவ் சக்தி மண்டல் உறுப்பினர்கள் இரண்டு தவளைகளுக்கும் விவாகரத்து செய்துவிட்டால் மழை நிற்க வாய்ப்புள்ளது என்ற முடிவெடுத்தனர். அதற்கான சடங்குகளையும் இன்று செய்து முடித்தனர்.
இதுகுறித்து ஓம் சிவ் சக்தி மண்டலைச் சேர்ந்த சுரேஷ் அகர்வால் பிடிஐயிடம் கூறியதாவது:
''ஜூலை மாதத்தில் மழை பெய்யாதா என்று எங்கள் மாநிலமே காத்துக் கிடந்தது. மழைக் கடவுளை திருப்தி செய்வதற்காக தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் சடங்குக்கு ஏற்பாடு செய்தோம். நாங்களே இரண்டு களிமண் தவளைகளை உருவாக்கி அவற்றுக்குத் திருமணம் செய்துவைத்தோம். அப்போது மழை பெய்யத் தொடங்கியது.
அப்போது பெய்யத் தொடங்கிய மழை இன்னும் நிற்கவில்லை. இடைவிடாமல் பெய்த மழையால் இப்போது பெரும் சேதங்களை மாநிலம் சந்தித்துவிட்டது. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பும் நாங்கள் மழையைத் தடுக்கவே அவற்றைப் பிரித்தோம். இதற்கான விளைவுகளும் இயற்கையிடமிருந்து கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
தூரந்து மகாதேவர் கோயிலில் வைத்து தவளைகளுக்கு ஒரு முறையான பிரிப்பு விழாவை சம்பிரதாயப்படி செய்தோம்.
பக்தர்களின் கோஷங்கள் சடங்குப்பூர்வமான மந்திரங்களுக்கு இடையில் ஒரு நீர் நிரம்பிய பாத்திரத்தில் வைக்கப்பட்ட இரண்டு களிமண் தவளைகளையும் தனித்தனியே விடுவித்தோம்''.
இவ்வாறு சுரேஷ் அகர்வால் தெரிவித்தார்.
மாநிலத்தில் வழக்கமாக 31 சதவீதம் மழைதான் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு போபாலில் மட்டுமே 81 சதவீத மழை பெய்தது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் முக்கிய ஆறு அணைக்கட்டுகளும் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகளை நோக்கி வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.