

புதுடெல்லி,
போலி பாஸ்போர்ட்டுடன் ஹாங்காங்கிலிருந்து இந்தியாவந்த 68 வயதான ஒரு நபர் 89 வயது மனிதரைப் போன்று பல ஆண்டுகளாக அதிகாரிகளை ஏமாற்றி வந்த நிலையில், இன்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
''இன்று காலை ஹாங்காங்கிலிருந்து விமான எண் எஸ்.ஜி 32 விமானம் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. ஹாங்காங் விமானம் டெல்லி வந்தவுடன் அனுமதிக்காக, பயணிகளிடம் சோதனைகள் நடந்தன.
அப்போது ஒரு பயணியிடம் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி அக்டோபர் 20, 1930 என்று இருந்ததையும் உண்மையான நபர் வயது குறைவாக இருப்பதையும் அவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதையும் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
68 வயதான குர்தீப் சிங் என்பவர் 89 வயதுமிக்க கர்னைல் சிங் பெயரில் ஒரு பாஸ்போர்ட்டைத் தயாரித்து அவர் பயணம் செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை டெல்லி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.
ஒரு விரிவான விசாரணைக்குப் பிறகு, அந்த நபரின் உண்மையான பெயர் குர்திப் சிங் என்றும் அவரது உண்மையான பிறந்த தேதி மார்ச் 16, 1951 என்றும் தெரியவந்தது. சிங் மீது இந்திய குடியேற்றத் துறையை ஏமாற்றி போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் (விமான நிலையம்) சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.
குர்திப் சிங் ஹாங்காங்கிற்கு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி புறப்பட்டார், கர்னைல் சிங் என்ற போலியான பெயரிலேயே அவருக்கு ஹாங்காங் நிரந்தரக் குடியுரிமை அட்டை, இந்திய பாஸ்போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
2008லிருந்து போலியான பெயரில் பயணம்
1995 ஆம் ஆண்டில் தனது சொந்த பாஸ்போர்ட்டில் தனது முதல் இந்தியா-ஹாங்காங் பயணத்தை குர்திப் சிங் மேற்கொண்டார். அவர் அப்போதே இதுபோன்ற தவறான முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து வசிக்க ஹாங்காங்கின் நிரந்தர அடையாள அட்டையைப் பெற அவரால் அப்போது வெற்றி பெற முடியவில்லை என்று துணை ஆணையர் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டில், ஒரு முகவரை அவர் தொடர்பு கொண்டார். கர்னைல் சிங் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்தார். அதில் அவரது புகைப்படம் இருந்தது. 2008ஆம் ஆண்டு முதல், அவர் அந்த பாஸ்போர்ட்டிலேயே ஒவ்வொரு முறையும் ஹாங்காங்கிற்கு வருகை தருகிறார். மேலும் ஹாங்காங்கின் நிரந்தர ஐடியைப் பெறுவதிலும் வெற்றி பெற்றார்''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.