

புதுடெல்லி
முத்தலாக் நடைமுறையைத் தடை செய்ய கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
இந்த மனுவை முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு தாக்கல் செய்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஏற்கெனவே 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது புதிய மனுவாகத் தாக்கலானது.
முஸ்லிம் பெண்கள் காலங்காலமாக தங்கள் கணவர்களால் மூன்றுமுறை தலாக் கூறி விவாகத்து செய்யபப்படும் முறையைத் தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, சட்டம் இயற்ற மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. அதன்படி முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த முத்தலாக் தடைச் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் முறைக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவுகிறது.
இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு ஒன்று தாக்கலானது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் கமலேஷ் குமார் மித்ரா ஆஜராகினார்.
அவர் வாதிடுகையில், " மத்திய அரசு முத்தலாக் நடைமுறையைத் தடை செய்ய கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டம் அடிப்படை உரிமையை மீறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்போது, முஸ்லிம் பெண்களும், ஆண்களும் தங்களின் அடிப்படையை உரிமையை உடனடியாக இழந்துவிடுவார்கள். இதனால், முத்தலாக் தடைச் சட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து அந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என கமலேஷ் குமார் மித்ரா தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.
ஐஏஎன்எஸ்