

புதுடெல்லி
"பாஜக அரசின் 100 நாள் ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான். மெயின் பிக்சரை இனிதான் பார்க்கவுள்ளீர்கள்" என்று பிரதமர் மோடி பேசியதைக் கிண்டல் செய்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் பாஜக துரிதமாக வேலை செய்யும் அரசை, மக்களின் கனவுகளுக்காக வேலை செய்யும் அரசை அமைக்கும் என உறுதியளித்தேன். மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தேன். அவற்றில் பல இன்று நிறைவேறியுள்ளன. முதல் 100 நாட்களில் தேசம் பாஜக ஆட்சியின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டது. முழுப்படம் இனிமேல்தான் பாக்கியிருக்கிறது" எனக் கூறியிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், "என்னே ஓர் அற்புதமான ட்ரெய்லர். பிரதமருக்கு நாட்டின் பொருளாதார நிலவரம் தெரியும் என்றே நினைக்கிறேன். இதற்காக அவர் நியூட்டனையோ, ஐன்ஸ்டீனையோ நினைவுகூர வேண்டிய அவசியம் இல்லை.
முதல் காலாண்டில் நமது பொருளாதாரம் 5% ஆக சரிந்துள்ளது. இது கடந்த 16 காலாண்டுகளில் இல்லாத அளவிலான வீழ்ச்சி. ஏற்றுமதி தேக்கநிலை கண்டுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி கண்டிருக்கிறது. அப்புறம் இந்த ட்ரெய்லரில் ரூ.5000 சம்பாதிக்கும் நபர் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.50,000 அபராதம் கட்டுகிறார்.
புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. போலி வழக்குகளில் எதிர்க்கட்சியினர் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். வேலைவாய்ப்பு திண்டாட்டம் 8.2% ஆக அதிகரித்திருக்கிறது. இதில் அரசின் சாதனை எங்கிருக்கிறது என்று அவர்களிடமேதான் கேட்க வேண்டும்.
முன்னாள் நிதியமைச்சர் கைது விவகாரத்தில், 'சிறை செல்ல வேண்டியவர்கள் சென்றுதானே ஆக வேண்டும்' என்று பிரதமர் கூறுகிறார். இப்போதுதான் விசாரணையே நடைபெறுகிறது. அதற்குள் எப்படி பிரதமருக்கு சிதம்பரம் சிறை செல்ல வேண்டியவர் என்பது உறுதியாகத் தெரியும். அப்படியென்றால் பிரதமர்தான் விசாரணை அமைப்புகளுக்கு கைது உத்தரவைப் பிறப்பித்தாரா? ஒருவேளை அது உண்மையென்றால் அது சட்டவிரோதமானது. இவர்கள் காட்டும் ட்ரெய்லர் ஒரு அடியாளின் ட்ரெய்லர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டை பழைய முறையின்படி வரையறுத்தால் 3.5% என்றளவில்தான் இருக்கும்.
பாஜக ஆளும் மாநிலங்களே புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்றன.
இத்தகைய சூழலில் பிரதமர் ட்ரெய்லர் மட்டுமே வந்திருக்கிறது. பிரதான படம் இன்னும் பாக்கியிருக்கிறது எனக் கூறியிருப்பது விமர்சனத்துக்குரியது" என கபில் சிபல் கூறியுள்ளார்.
-ஏஎன்ஐ