சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி.யை தொந்தரவு செய்த டாக்ஸி ஓட்டுநர்

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே : கோப்புப்படம்
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே : கோப்புப்படம்
Updated on
2 min read

மும்பை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவைத் தொந்தரவு செய்த வாடகை கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே. மும்பையில் உள்ள தாதர் ரயில்வே நிலையத்துக்கு நேற்று வந்துள்ளார். அப்போது அவரின் வழியை மறித்த ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் கார் தேவையா என்று கேட்டுள்ளார். அதற்கு எம்.பி. சுப்ரியா, தனக்குத் தேவையில்லை என்று செல்ல முயன்றார். ஆனால், தொடர்ந்து அவரின் பாதையை மறித்து அந்த வாடகைக் கார் ஓட்டுநர் தொந்தரவு செய்துள்ளார்.

இதையடுத்து, சுப்ரியா சுலே ரயில்வே பாதுகாப்பு போலீஸாரிடம் அந்த வாடகைக் கார் ஓட்டுநர் குறித்துப் புகார் அளித்தார்.

ட்விட்டரில் சுப்ரியா சுலே கூறுகையில், " வாடகைக் கார் ஓட்டுநர் குல்ஜீத் சிங் மல்ஹோத்ரா என்பவர் நான் ரயில்வே வளாகத்துக்குள் நுழைந்தபோது கார் வேண்டுமா என்று கேட்டு தொந்தரவு செய்தார். நான் தேவையில்லை என்று கூறி நகர்ந்தபோதும் என்னை விடாமல் துரத்தி என் வழியை மறித்தார். வெட்கமே இல்லாமல் என்னுடன் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க முயன்றார்" என்று புகாரில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் ட்விட்டரில் சுப்ரியா சுலே புகார் அளித்தார். அதில், " இதுபோன்ற சம்பவங்கள் பயணிகளுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இதைக் கவனிக்க வேண்டும். வாடகை கார் ஓட்டுநர்கள் தங்களின் சேவையை வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருந்தால், அதை ரயில்வே வளாகம், விமான நிலையத்துக்குள் வழங்காமல் வாடகைக் கார் நிலையத்தில் மட்டும் அவர்கள் சேவையை வழங்க அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்

எம்.பி. சுப்ரியா சுலேவின் புகாரையடுத்து, வேகமாகச் செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், அந்த வாடகைக் கார் ஓட்டுநர் மல்ஹோத்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடம் உரிய டிக்கெட் இல்லாமைக்கு ரூ.260 அபாரதமும், ஓட்டுநருக்கான சீருடை அணியாமல் இருந்ததால் ரூ.400 அபராதமும் விதித்தனர்

இதுகுறித்து தாதர் ரயில் நிலைய ஆர்பிஎப் போலீஸ் ஆணையர் கே.கே.அஷ்ரப் கூறுகையில், "இந்தச் சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தோம். எம்.பி. சுப்ரியாவுக்கு தொந்தரவு கொடுத்த அந்த ஓட்டுநருக்கு எதிராக சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கும் வகையில் ஆர்பிஎப் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு அந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்தமைக்காக சுப்ரியா சுலே நன்றியையும் பாராட்டையும், ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.


ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in