நான் பேசியது தவறு; வாய் தவறி கூறிவிட்டேன்: ஐன்ஸ்டீன் பற்றிய பேச்சு- பியூஷ் கோயல் விளக்கம்

நான் பேசியது தவறு; வாய் தவறி கூறிவிட்டேன்: ஐன்ஸ்டீன் பற்றிய பேச்சு- பியூஷ் கோயல் விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி,

ஐன்ஸ்டீன் பற்றி வாய் தவறி நான் கூறிவிட்டேன், நான் தெரிவித்த கருத்துகள் தவறுதான் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழிற்துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்குக் காரணமாக ஓலா, உபர் சேவைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதையடுத்து ஜிடிபி கணக்கு பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஐன்ஸ்டீனுக்கும் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க கணிதம் உதவவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தது நியூட்டன் என்பதால் அமைச்சர் தவறாக ஐன்ஸ்டீன் என கூறியதாக தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதையடுத்து அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘ஐன்ஸ்டீன் பற்றி நான் நேற்று பேசும்போது தவறுதலாக வாய் தவறிப் பேசிவிட்டேன். தவறுகள் செய்வதற்கான வாய்ப்பு நம் அனைவருக்குமே ஏற்படும். தவறு செய்யாத நபர், புதிதாக எதையும் முயல்வதில்லை என்று அர்த்தம். இதனை ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

தவறு செய்ய அஞ்சுபவர்களுக்கு மத்தியில் நான் இல்லை. அதேசமயம் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அந்தக் கருத்தை உணர்த்துவதற்காக நான் பேசியது கடைசியில் தவறாகி விட்டது. எதை உணர்த்த விரும்பினேனோ அதற்குப் பதிலாக எனது தவறு தான் பெரிதாகி விட்டது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் தவறு செய்ததை பொதுவெளியில் ஒப்புக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in